கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை துப்பாக்கி என்பன கண்ணிவெடி அகற்றும் பிரிவினால் இன்று (22.05.2020) மீட்கப்பட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டு  இறுதிவரை விடுதலைப்புலிகளின் முன்னரங்க பகுதியாக காணப்பட்ட பிரதேசத்திலேயே இவை காணப்பட்டுள்ளன.

கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே பணியாளர்கள் இவற்றை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அவர்கள் பளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணபவராஜா, முகமாலை பகுதிக்குச் சென்று மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்களை  பார்வையிட்டதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறும்  உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு இறுதி வரை குறித்த பிரதேசம் விடுதபை்புலிகளின் பலமான முன்னரங்கப்பகுதியாக காணப்பட்டதோடு, படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடும் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் முகமாலை பிரதேசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.