வெளிக்கிளம்பும் உலக ஒழுங்கின் எல்லைக்கோடுகளை வரையறை செய்யவிருக்கும் 6 புவிசார் அரசியல் கூறுகள்

கொவிட் - 19 தொற்றுநோய் ஒரு உலக சுகாதார நெருக்கடியாக தொடங்கியது.உலகம் பூராகவும் அது விரைவாக பரவியதையடுத்து நாடுகள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி அன்றாட வழமை வாழ்க்கையை முடங்கச்செய்தன.அதனால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியொன்று மூண்டது.குறிப்பிட்ட சில புவிசார் அரசியல் போக்குகளை  உய்த்துணரக்கூடியதாக இருக்கின்றது.ஆனால், கொவிட் -- 19  ' அதிர்ச்சி சிகிச்சை ' அவற்றை கூர்மையான கவனத்துக்கு கொண்டுவந்திருப்பதுடன் வெளிக்கிளம்பும் உலக ஒழுங்கின் எல்லைக்கோடுகளை வரையறை செய்கின்றது.

ஆசியா வளர்கிறது அமெரிக்கா தேய்கிறது

2008 உலக நிதி நெருக்கடியைத் தொடர்ந்து தெளிவாகத் தோன்றிய  முதலாவது போக்கு ஆசியாவின் எழுச்சியாகும். இந்த எழுச்சி தவிர்க்கமுடியாதது  என்பதைச்  சுட்டிக்காட்டிய பொருளியல் வரலாற்றாசிரியர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை, உலகளாவிய நிகர உள்நாட்டு உற்பத்தியின்  அரைவாசிக்கு ஆசியா காரணமாக இருந்தது.ஐரோப்பாவின் கடற்படை விஸ்தரிப்பையும் காலனித்துவத்தையும் தொடர்ந்து கூடவந்த கைத்தொழில் புரட்சி மேற்குலகின் எழுச்சிக்கு பங்களிப்புச் செய்தது.2008 நிதி நெருக்கடி நிலைமைக்கு தக்கபடி மாறுதலடையக்கூடிய ஆசிய பொருளாதாரங்களின் பண்புத்திறனை வெளிக்காட்டியது ; இன்றும் கூட ஜி -- 20 நாடுகள் மத்தியில், சீனாவும் இந்தியாவும் மாத்திரமே 2020 ஆண்டில் பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்யக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று பொருளாதார முன்மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் ஒப்பிடும்போது தொற்றுநோயைக் கையாளுவதில் ஆசிய நாடுகள் பெரிய விரைவூக்கத்தை வெளிக்காட்டியிருக்கின்றன.இது சீனாவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படடதல்ல, பெரும் எண்ணிக்கையான ஏனைய ஆசிய நாடுகளும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பெரிய செயல்முனைப்பை காட்டியிருக்கின்றன.இதன் விளைவாக ஆசிய பொருளாதாரங்கள் மேற்குலகப் பொருளாதாரங்களையும் விட விரைவாக மீட்சி பெறும்.

இரண்டாவது போக்கு உலக ஒழுங்கை வடிவமைப்பதில் ஒரு நூற்றாண்டு காலமாக முன்னரங்கத்தில் நின்று செயற்பட்ட பிறகு அமெரிக்கா செய்திருக்கும் பின்வாங்கலாகும். முதலாவது உலகப்போருக்குப் பின்னர் வேர்சைல்ஸ் உடன்படிக்கை மற்றும் தேசங்களின் கழகம் (League of Nations ) அல்லது இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் மற்றும் பிறெற்றன் வூட்ஸ் நிறுவனங்கள் தொடக்கம் பனிப்போரின்போது மேற்குலகிற்கு தலைமை தாங்கியது வரை, பயங்கரவாதத்தினால் அல்லது அணுவாயுதப்பரவலினால் அல்லது காலநிலை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்டட அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய எதிர்வினைகளை வார்ப்புச் செய்தது வரை,  அமெரிக்கா தீர்க்கமான ஒரு பாத்திரத்தை வகித்தது.

அமெரிக்காவின் தற்பெருமையும் இறுமாப்பும் கடுஞ்சினத்தை தோற்றுவிக்கவும் செய்தது.அண்மைய வருடங்களில் இதை மிகவும் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது.ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கா செய்த தலையீடுகள் உள்நாட்டில்அரசியல் துணிவாற்றலையும் வளங்களையும் உறிஞ்சியெடுத்த பெருஞ்சகதிகளாக மாறின. இதன் விளைவான சலிப்புணர்வே அமெரிக்கா இனிமேல் " பின்னால் இருந்து தலைமைதாங்கும் உபாயத்தை கையாளவேண்டும் " என்று பேச( முன்னாள் ) ஜனாதிபதி பராக் ஒபாமாவை நிர்ப்பந்தித்தது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதை " அமெரிக்கா முதலில் "(America First ) என்று மாற்றினார்.தற்போதைய நெருக்கடியின்போது, பற்றாக்குறையாகவுள்ள மருத்துவ உபகரணங்களையும் மருந்துவகைகளையும் முழுவதையும் வாங்கி தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கும் நேச நாடுகளில் தடுப்புமருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் உயிரியல் தொழில்நுட்பக் கம்பனிகளை விலைக்கு வாங்குவதற்கும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் " அமெரிக்கா முதலில் " என்பது " அமெரிக்கா தன்னந்தனியே " (America alone) என்று அர்த்தப்படக்கூடும் என்பதையே காட்டுகின்றன. மேலும், அமெரிக்காவின் தலைமைத்துவத்தில் நாடுகள் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த நிலையில், தற்போதைய வைரஸ் நெருக்கடியை குளறுபடியான முறையில் அது கையாணடுவருகின்றமை அந்த நாடுகள் அமெரிக்காவின் செயற்திறமை மற்றும் ஆற்றலிலும் கூட நம்பிக்கை இக்கின்றன என்பதையே காட்டுகிறது.

அமெரிக்கா இன்னமும் கூட உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் இராணவ வல்லமையையும் கொண்ட வல்லரசாக இருக்கிறது.ஆனால், தலைமை  தாங்குவதற்கான வல்லமையையும்  துணிவாற்றலையும்  அது இழந்துவிட்டது.இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் எத்தகையவையாக இருந்தாலும், அந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை.

ஐரோப்பாவின் உட்புறப் பிளவு

உள்ளக சவால்களை கையாளுவதில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து மூழ்கிக்கிடக்கின்றமை மூன்றாவது போக்காகும்.கிழக்கு ஐரோப்பிய அரசுகளையும் உள்ளடக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்புரிமையை விஸ்தரித்தமையும் யூறோ வலய உறுப்பு நாடுகள் மத்தியில் நிலவும் நிதி நெருக்கடியி்ன் தாக்கம், தொடருகின்ற பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் ஆகியவையே அந்த சவாலகளை தோற்றுவித்தன.

பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் பற்றிய அச்சவுணர்வு(Threat perception) பழைய ஐரோப்பாவுக்கும் புதிய ஐரோப்பாவுக்கும் இடையில் வேறுபடுகிறது.அதனால், சீனாவுடனும் ரஷ்யாவுடனுமான உறவுகள் போன்ற அரசியல் விவகாரங்களில் இணக்கப்பாட்டைக் காண்பது பெருமளவுக்கு கஷ்டமானதாகிறது.ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிளவு ( Trans-Atlantic divide ) ஐரோப்பிய நாடுகள் மத்தியிலான வெடிப்புக்களை(Intra -- European rift) அதிகரிக்கிறது. வளர்ந்துவரும் ஜனரஞ்சக அரசியல் (Populism ) ஐரோப்பிய ஒன்றிணைவை வெறுப்பவர்களுக்கு கூடுதல் செல்வாக்கைக் கொடுத்திருப்பதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்புநாடுகள்  "பரந்த மனப்பான்மையில்லாத ஜனநாயகத்தின் " (Illiberal democracy ) பண்புகளை ஆதரித்துப்பேசும் நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலைவரத்துக்கு மேலதிகமாக, யூரோ வலயத்திற்குள் காணப்படும் வடக்கு -- தெற்கு பிளவும் ஒரு பிரச்சினையாக வ ௌர்கிறது.கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் ஒரு தசாப்தத்துக்கு முன்னர்(அரசாங்க வருவாய் தொடர்பில் பழமைவாதப் போக்குடைய ஆஸ்திரியா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூண்டுதலுடன்) ஐரோப்பிய மத்திய வங்கியினால் சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்பட்டபோது பதற்றம் தோன்றியது.

ஏறறுமதிக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய அயல்நாடுகளினால் இத்தாலிக்கு மருத்துவ உபகரணங்கள் மறுக்கப்பட்டபோது மேலும் சேதம் ஏற்பட்டது.உடனடியாக  சீனா விமானமூலம் மருத்துவக்குழுக்களையும் முக்கியமான விநியோகங்களையும் இத்தாலிக்கு அனுப்பிவைத்தது.ஷெங்கன் விசா ( Schengen Visa) அல்லது எல்லைகளின் ஊடான சுதந்திர நடமாட்டம் தொற்றுநோயின் விளைவாக ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகியிருந்தது.பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் மக்களின் சுதந்நிரமான நடமாட்டத்தின் வரம்புகளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு ஆன்மசோதனை செய்யவேண்டிய தேவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இருக்கிறது.

சீனாவின் எழுச்சி

   நான்காவது போக்கு முதலாவது போக்குடன் தொடர்புடையதாகும்.அதாவது பலம்பொருந்தியதும் கூடுதலான அளவுக்கு தன்முனைப்புடன் செயற்படுகின்றதுமான சீனாவின் வெளிப்படுகையாகும்.நூற்றாண்டின் திருப்பத்தில் உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்துகொண்டதற்கு பிறகு சீனாவின் பொருளாதார வகிபாகத்தின் வளர்ச்சி தெளிவாகத் தெரியவந்த அதேவேளை, அதன் கூடுதல் தன்முனைப்பு ஜனாதிபதி சி ஜின்பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் திட்டவட்டமாக உருப்பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியது.புத்திளமை பெற்றிருக்கும் சீனா உலகளாவிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு இப்போது தயாராகிவிட்டது என்று அவரின் அழைப்பு அமைந்தது.

சீனாவின் தன்முனைப்பு முதலில் அதன் அயலகத்திலும் பிறகு இப்போது அமெரிக்காவிலும் கவலையை ஏற்படுத்தியது ; ஏமாற்றப்பட்டுவிட்டதாக அமெரிக்கா உணர்கிறது.ஏனென்றால்,  பொருளாதார அடிப்படையில் ஒன்றிணைக்கப்படும் சீனா அரசியல் ரீதியில் கூடுதலான அளவுக்கு திறந்தபோக்குடையதாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் சீனாவின் எழுச்சிக்கு அமெரிக்கா உதவியிருந்தது.அண்மைய வருடங்களில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுமுறை ஒததுழைப்பு என்ற நிலையில் இருந்து போட்டாபோட்டிக்கு  நகர்ந்தது ; இப்போது அது  வர்த்தக மற்றும் தொழில்நுட்பப் போர்களாக மாறி படிப்படியாக மோதல்நிலைக்கு நிலைமாற்றம் பெற்றுவருகிறது.கொவிட் -- 19 வைரஸ் தொற்றுநோய் இரு நாடுகளுக்கும் இடையிலான சொற்போரைஅதிகரித்திருக்கிறது.அமெரிக்காவில் தேர்தல் நெருங்குவதால் மோதல்நிலை அதிகரிக்கவே செய்யும்.

சீனா  ஜனாதிபதி சி ஜின்பிங் முன்னென்றும் இல்லாதவகையில் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால மட்டுப்பாடு நீக்கியதன் மூலம் அவர் 2022 ஆண்டுக்குப் அப்பாலும்  பதவியில் தொடரப்போகிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார்.அவரது பேரார்வம் மிக்க ' மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ' ( Belt and Road Initiative ) உள்கட்டமைப்பு நிர்மாணத்தில் ட்ரில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்வதன் மூலமாக சீனாவுடன் யூரேசியாவையும் ஆபிரிக்காவையும் கடல்மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கு  அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய  எந்தவொரு முயற்சியையும் முன்கூட்டியே தடுக்கும் ஒரு மூலோபாயமாகவும்  அந்த செயற்திடடம் அமைகிறது. சி ஜின்பிங்கின் தலைமைத்துவம் கேள்விக்குட்படுத்தப்பட்டால், முரட்டுத்தனமான சில கொள்கைகளில் து தளர்வை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அமெரிக்காவுடனான முரண்நிலையும்்போட்டாபோட்டியும் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

வலுவிழக்கும் நிறுவனங்கள்

உலகளாவிய பிரச்சினைகள் உலகளாவிய பிரதிபலிப்புக்களையும் தீர்வுகளையும் வேண்டிநிற்கின்றன.கொவிட் -- 19 தொற்றுநோய் பரவலையடுத்து சர்வதேச மற்றும் பல்தரப்பு நிறுவனங்களை அரங்கில் எங்கும் காணமுடியவில்லை.சுகாதார நெருக்கடிக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு வழிகாட்டவேண்டிய இயல்பான பொறுப்பு உலக சுகாதார நிறுவனத்துக்கே உரியதாகும்.ஆனால், அந்த நிறுவனம் அரசியலுக்கு பலிக்கடாவாகிப் போய்விட்டது. சீனாவின் முயற்சிகளை தொடக்கத்தில் சகாதார நிறுவனம் அங்கீகரித்த காரணத்தால், சீனாவின் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஒன்றில் இருந்தே தொற்றுநோய் பரவத்தொடங்கியதென்றும் முக்கியமான தகவல்களை மூடிமறைத்த பெய்ஜிங்கின் செயல்  உலகம் பூராவும் நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததென்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியபோது அந்த நிறுவனம் ஒரு தற்காப்பு நிலைக்குச் செல்லவேண்டியதாயிற்று. 1929 ஆம் ஆண்டுக்கப் பிறகு மோசமான பொருளாதார மந்தநிலைக்கு உலகம் இப்போது  முகங்கொடு்கின்றவேளையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, ஜி-- 7 மற்றும் ஜி -- 20 போன்ற அமைப்புக்கள் எல்லாம் முடங்கிக்கிடக்கின்றன.

இந்த அமைப்புக்கள் எப்போதுமே பெரிய வல்லரசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டி அரசியலுக்கு ஆடபட்டவையாகவே இருந்துவந்திருக்கின்றன.பனிப்போர் ( Cold War)காலகட்டத்தின்போது அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான போட்டிமனப்பான்மை ஐ.நா.பாதுகாப்புச்சபையில் சர்ச்சைக்குரிய பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தடுத்தது.இப்போது பெரிய வல்லரசுகளின் அதிகாரப்போட்டி திரும்பவும் வந்திருக்கின்ற நிலையில், பாதுகாப்புச் சபை மீண்டும் முடங்கிப்போகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் வழமையான பட்ஜெட்டுகள் சுருங்கிப்போன நிலையில் அவை அவற்றின்சுயாதீனத்தை பல தசாப்தங்களாக  இழந்திருக்கின்றன.அதனால், மேற்கு நாடுகளிடமிருந்தும் பவுண்டேசன்களிடமிருந்தும் கிடைக்கப்பெறுகின்ற தன்னார்வப் பங்களிப்புகளிலேயே இந்த நிறுவனங்கள் பெருமளவுக்கு தங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கத் தலைமைத்துவம் அண்மைய தசாப்தங்களில் பிறெட்டன் வூட்ஸ் நிறுவனங்களை ( உலகளாவிய சுகாதாரத்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்ஜெட்டின் 250 சதவீதத்தை உலகவங்கி செலவிடுகிறது ) வலுப்படுத்தியிருக்கிறது.ஏனென்றால், அமெரிக்காவுக்கு இருக்கும் வாக்களிக்கும் அதிகாரம் அதற்கு தடுப்பு அதிகாரம் ( வீ்ட்டோ ) ஒன்றைக் கொடுக்கிறது. கொரோனா நெருக்கடியைக் கையாளுவதற்கு பல்தரப்பு அணுகுமுறையொன்று இன்று  இல்லாதமை அந்த நிறுவனங்களில் சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக உணரப்பட்ட தேவையை வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது.ஆனால், கூட்டு உலகத்தலைமைத்துவம் ஒன்று இல்லாமல் அது நடைபெற முடியாது.

இறுதியான போாக்கு சக்தி வள அரசியலுடன்(Energy Politics ) சம்பந்தப்பட்டதாகும்.காலநிலை மாற்றம் தொடர்பான அக்கறைகளி்ன் காரணமாக புதுப்பிக்க சக்தி வளங்கள் மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை நாடுவதில் ஆர்வமும்  அதிகரிக்கின்றமையும் மிகப்பெரிய சக்திவள உற்பத்தி நாடாக அமெரிக்கா வெளிக்கிளம்புகின்றமையும் சக்திவளச் சந்தையை அடிப்படையான அமைப்பியல் சார்ந்த மாற்றத்துக்குள்ளாக்குகிறது.இப்போது நெருங்கிவரும் பொருளாதார மந்தநிலையும் எண்ணெய் விலைகளின்  வீழ்ச்சியும் எண்ணெய் வருவாயில் மாத்திரமே தங்கியிருக்கின்ற மேற்காசிய நாடுகளில் உள்ளக பதற்றங்களை தீவிரமடையச்செய்கின்றன.பிராந்திய நாடுகளிடையே நீண்டகாலமாக இருந்துவரும் போட்டிமனப்பான்மை அடிக்கடி முரண்நிலைகளுக்கும் மோதல்களுக்கும் வழிவகுத்துவந்திருக்கின்றது.இதனால்,  ஆட்சிக்கட்டமைப்புக்கள் நொய்தானவையாக இருக்கின்ற நாடுகளில் அரசியல் உறுதிப்பாடின்மை இப்போது தோன்றக்கூடும்.

2020 இறுதி மட்டில் சாத்தியமாகக்கூடிய புதிய கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து உலகளாவிய சுகாதார நெருக்கடியைக் கையாள உதவும்.ஆனால், தோன்றியிருக்கின்ற புதிய நிலைவரம் பற்றிய  " பீதி என்ற வைரஸினால் "  கட்டவிழும் இந்த புதிய போக்குகள்  மேலும் கேடானவையாகக்கூடும்.வளர்ந்துவரும் தேசியவாதமும் தற்காப்பு அணுகுமுறைகளும் பொருளாதார பின்னடைவை பாரிய பொருளாதார நெருக்கடியாக நீடிக்கவைக்கும் ; ஏற்றத்தாழ்வுகளையும் துருவமயத்தையும் கூர்மையாக்கும். நேரக்கூடியது என்ன என்று முன்மதிப்பீடு செய்யமுடியாத  -- மிகவும் கொந்தளிப்பான நாட்கள் எம்மைக் காத்திருக்கின்றன.

ராகேஷ் சூட்

 ( ராகேஷ் சூட் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரயும் தற்போது புதுடில்லி ஒப்சேர்வர் றிசேர்ச் பவுண்டேசனின் ஒரு விசேட ஆய்வாளருமாவார் )