(இராஜதுரை ஹஷான்)

குறைந்த வருமானம் பெறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துவதும், வறுமையினை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பிரதான இலக்கு என பொருளாதார முன்னேற்ற திட்டமிடல் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு சொந்தமான பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் செயலணியின் தலைவர் தலைமையில் இடம் பெற்றது.

செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ச குறிப்பிட்டதாவது,

உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டுமாயின் விவசாயத்துறை, விளங்கு வேளாண்மை முன்னேற்றமடைய வேண்டும்.

நாட்டில் 10,000ம் ரூபா மாத வருமானம் பெறும் குடும்பங்கள் 25,573ம், 10,000 ற்கும் 20,000 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட வருமானம் பெறும் குடும்பங்கள் 56,8715 உள்ளன. இவர்கள் அனைவரும் வறுமை கோட்டில் உள்ளார்கள்.

இதற்கமைய நாட்டில்  10 இலட்சத்துக்கும் அதிகமான நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும், வறுமையினை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். விவசாய மற்றும் கால்நடை  அபிவிருத்தி ஊடாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். என்றார்.

பிற நாடுகளின் அழுத்தங்கள் இன்றி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது, காணப்படும்  பௌதீக வளங்களை முழுமையாக  பயன்படுத்துதல், காலநிலை, மண் வளத்திற்கு அமைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விவசாய துறையில் புதிய நவீன திட்டங்களை அறிமுகம் செய்யல் உள்ளிட்ட விடயங்கள் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டன.