(எம்.எப்.எம்.பஸீர்)

பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இணைய ஊடாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் சி.ஐ.டி. இன்று 5 மணிநேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இது குறித்த விசாரணைகளுக்காக ரஞ்சன் ராமநாயக்க, சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணை அறையில் ஆஜராகிய நிலையில், அங்கு அவரிடம் பிற்பகல் 5.30 மணி வரை விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து, வெளியேறிச் சென்றதாக சி.ஐ.டி.யின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இணையத்தில், யூ ரியூப் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தும் போது, இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில்  கருத்து வெளியிட்டதாக தேரர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.