கொரோனா வைரஸ் ஏற்பட்ட இடங்களில் மீண்டும்  2 ஆவது அலையாக உருவாகும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின்  பிரதிநிதியான  மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார்.     

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலுள்ள  உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் அந்நாட்டு வானொலி ஒன்றிற்கு அளித்த நேர்காணலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். 

கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், 2 ஆவது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடுமென நிபுணர்கள் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோ அதனோம் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

கொரோனா உலகளவில்  50 இலட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது, 3 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்துள்ளதோடு இதுவரை 20 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.