பெருந்தோட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதுவரை காலம் கொழும்பிலும் நகரங்களையும்  அண்டி தொழில் புரிந்து வந்த, இளைஞர்கள் யுவதிகள் பலர் இன்று தொழில்வாய்ப்புகள் இன்றி, பல்வேறுநெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இவர்களில் ஒரு சாரார் தொழில் செய்த இடங்களில் இருந்து,  வேலைக்கான அழைப்பு வராத நிலையிலும், மற்றும் ஒரு சாரார் தங்கள் தொழிலை ஆரம்பிக்க முடியாத நிலையிலும், வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர்.

 இதனால் தங்கள் எதிர்காலம் தொடர்பில் அடுத்த கட்டமாக எதனை செய்வது என்று தெரியாத நிலையிலும் மிகுந்த தர்ம சங்கடமானநிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கு மத்தியில் இதுவரை கிடைத்த வருமானமும் இல்லாத நிலையில், அன்றாடம் எவ்வாறு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்று ஒவ்வொரு குடும்பமும் ஏங்கும் துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.

இவற்றுக்கு மத்தியில் அரச நிவாரணங்களோ, அன்றேல் தொழிலுக்கேற்ற வருமானமோ, அதுமாத்திரமன்றி அன்றாடம் தொழில் செய்து அதன் மூலம் கிடைத்த ஊதியமோ, எதுவும் தற்போது இல்லாத நிலையில் பலரும் மிகுந்த கவலைக்கு  ஆளாகியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள  போதிலும் தொழில் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படாத நிலையிலேயே இருந்து வருகின்றது.

இதனால் புதிய தொழில் வாய்ப்புகளைப்பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.

 இவற்றுக்கு மத்தியில் பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் கடன்பெற்றும் கையிலிருந்த பணத்தை முதலிட்டும், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்து அதன் மூலம் தமது ஊதியத்தை தேடிவந்தனர்.

எனினும் கடந்த 2  மாதங்களாக தொடர்ந்து  ஊரடங்குச் சட்டத்தாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் அவர்களின் தொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த இடங்களில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும்  தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் தாம் பெற்ற கடனை செலுத்த முடியாமலும்,  தவணைக் கட்டணங்களை உரிய திகதியில் வழங்க முடியாத நிலையிலும், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து உள்ளனர்.

இந் நிலையில் அவர்களை நம்பி வாழும் குடும்பங்கள், மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி உள்ளதையும் சர்வசாதாரணமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே மலையக அரசியல் தலைமைத்துவங்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களின் துயரைத் துடைக்கவும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும்.

சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப் பிரதேச மக்களுக்கு, இன்றைய தேவை அவர்களின் துயரைத் துடைத்து, அவர்களை கைதூக்கி விடுவதே தவிர வெறும் உதட்டளவில் ஆன உதவிகள் அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்