(லியோ நிரோஷ தர்ஷன்)

நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு சமஷ்டியை நோக்கி நகர்த்தப்படாது . தேசப்பற்றுக்குள் மறைந்து மோசடிகளில் ஈடுப்படுபவர்கள் உண்மைக்கு முரணான கருத்துக்களை சுய நலத்திற்காக பரப்பி வருகின்றனர். தேசிய கீதம் விவகாரத்திலும் இவ்வாறான நிலைப்பாடுகளே காணப்பட்டதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 

ஜாதிக ஹெல உறுமயவின் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

இதன் போது உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி ஆலோசகருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில்,

தமிழிழ் தேசிய கீதம் பாடிய போது ஜாதிக ஹெல உறுமய பூனையை போல் இருந்ததாக  கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தமிழிழ் தேசிய கீதம் பாடியமையை வரவேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களின் இரட்டை வேடத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்.  தேசப்பற்றுக்குள் ஒழிந்து அனைத்தும் செய்து விட முடியாது. 

புதிய அரசியலமைப்பு அமைப்பதற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கவின் அறிக்கையை மையப்படுத்தி நாடு பிளவுப்படுவதாகவும், சமஷ்டி வரும் எனவும் கூறுகின்றனர். மக்களின் கருத்துகளே அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அது அரசியலமைப்பு அல்ல. புதிய அரசியலமைப்பு சமஷ்டியை நோக்கி நகராது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். அதே போன்றுதான் மத உரிமைகள் குறித்தும் உண்மைக்கு முரணான கருத்துக்கள்  தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்