(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  1,045 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12மணி நேரத்தில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வெண்ணிக்கை இவ்வாறு 1,045 வரை அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 15 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் கிராகம தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர். ஏனைய இருவரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்களாவர்.

இந்நிலையில்  இந்த 1,045 தொற்றாளர்களில் 587  கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும்  உள்ளடங்குகின்றனர்.   இந்த கடற்படை வீரர்களுடன் சேர்த்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 599 ம் பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் இன்று மற்றும் 20 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.  அந்த 20 பேரில் 16 பேர் கடற்படை வீரர்களாவர். அதன்படி இதுவரை 604 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 237 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந் நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் இலங்கையில் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.   432  தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும்   134  பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே,  இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட கொத்தணிகளில்,  மிக வீரியமான கொத்தணியாக கருதப்படும் வெலிசறை கடற்படை முகாம் குறித்த  விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் விஷேட குழு, அதன் ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து அளித்த பரிந்துரைகள் பிரகாரம், தர்போது வெளிசறை முகாமைச் சேர்ந்த அனைத்து கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெலிசறை  முகாமிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  2,193 கடற்படையினர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் பதில் தலமை அதிகாரி, இராணுவ தளபதி சவேந்ர சில்வா கூறினார்.