(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றில் எதிர்தரப்பினர் மனுத்தாக்கல் செய்து மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளார்கள்.

கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற செயற்பாடாகும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதை கேள்விக்குட்படுத்தி எதிர்தரப்பினர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையினை இல்லாதொழித்துள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை. தங்களின் சுய நல அரசியல் தேவைகளை மாத்திரம் கருத்திற் கொண்டு அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.

கொரோனா வைரஸை முழுமையாக இல்லாதொழித்த பின்னர் தான் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என கருதுவது சாத்தியமற்றது. பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.