தமிழ் மக்களின் புரையோடிப்போன தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் யாவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு  முயற்சிகள், எந்த வகையிலும் சாத்தியமற்ற போக்குகளையே எடுத்துக் காட்டுகின்றன.

இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும் இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்கும், நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்திருக்கிறார். 

தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும், சர்வதேச சமூகம் அவர்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, குரல் கொடுத்தவர் நவநீதம்பிள்ளை அம்மையார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள், கடந்த ஆறு தசாப்த காலத்தில் மரணத்தை தழுவியுள்ளனர். 

இந்த நினைவு தினத்தில் மரணமான தமிழர்களை நாம் கௌரவிக்கும் அதேவேளை, அவர்களின் நீதிக்கும் சுதந்திரத்துக்கும் இழப்பீட்டைப்பெற்றுக் கொள்ளுவதற்குமான, அவர்களது போராட்டத்திற்கு நாம் துணை நிற்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்த வெற்றியின் 11 ஆவது தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகளின் பாரிய தியாகம் செய்யும் ராணுவத்தினருக்கு, தேவையற்ற விதத்தில் அழுத்தம் கொடுப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதுடன், நாட்டிற்கு  அநீதி ஏற்படுத்தும் வகையில், ஏதேனும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் செயல்படுமாக இருந்தால், அதிலிருந்து இலங்கையின் உறுப்புரிமையை நீக்குவதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையிலும் தமிழ் தலைவரகளின் ஒற்றுமையீனங்களும் ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் போக்குகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இதனால் தமிழினமே மோசமான பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளது. இன்றைய அரசியல் யதார்த்தத்தை உணர்ந்து தமிழ் தலைமைககள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் விடிவு பிறக்காது என்பதே யதார்த்தமாகும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்