யாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களிடம் தொடர் சங்கிலி அறுப்புக்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்பது தங்கச்சங்கிலிகளும் இரண்டு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக வீதியில் பயணிக்கும் வயோதிபப் பெண்கள் இளம் பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் அபகரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். 

 இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இலக்கத்தகடுகளை வயர்களால் கட்டிய நிலையில் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்களிடம்இருந்து தங்கச்சங்கிலி ஒன்றை மீட்டுள்ளதுடன் இரண்டுகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் இருபாலை மடத்தடிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அண்மையநாட்களாக இவர்கள் வீதியில் செல்லும் பெண்களை சங்கிலிகளை அறுத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

கோப்பாய் கொடிகாமம் சாவகச்சேரி சுன்னாகம் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வீதியில் சென்ற பெண்களிடம் அறுக்கப்பட்ட சங்கிலிகளை திருநெல்வேலியிலுள்ள நகைக்கடை ஒன்றில் அடைவு வைத்துள்ளனர். விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் அவற்றையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 9 தங்கச் சங்கிலிகள் திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் சந்தேகக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

இக் கைது நடவடிக்கை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினராலும் உப பொலிஸ் பரிசோதகர்  தலைமையிலான குழுவினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.