(க.கிஷாந்தன்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் மற்றும் வெலிஓயா தோட்டப்பகுதிகளில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டை சுற்றிவளைத்த ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள், இருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 20 லீற்றர் கோடா உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தியது.

இக்காலப்பகுதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் கூட மதுபான நிலையங்கள் திறக்கப்படவில்லை. எனினும், கடந்த 11 ஆம் திகதிக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை நிலையங்கள் இவ்வாறு மூடப்பட்டிருந்ததால் பெருந்தோட்டப்பகுதிகளில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் சம்பவங்கள் அதிகரித்தன. இது தொடர்பில் கடந்த மாதத்தில் மாத்திரம் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தோட்டப்பகுதிகளில் தற்போதும் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை கலால் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் ஓர் அங்கமாகவே செனன் மற்றும் வெலிஓயா பகுதிகளில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றன. கசிப்பு ஒரு போத்தல் ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.