பெய்ஜிங், (சின்ஹுவா) ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் 73 ஆவது வருடாந்த மகாநாட்டில் திங்களன்று சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆற்றிய உரையை உலகின் பல பாகங்களையும் சேர்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் பெரிதும் மெச்சியிருப்பதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகளாவிய ஒத்துழைப்பை  மேம்படுத்துவதற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அவரது யோசனைகள் அமைந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்கள். 

மகாநாட்டின்  ஆரம்பக் கூட்டத்தில் வீடியோ தொடர்பு மூலமாக பேராளர்களுக்கு உரை நிகழ்த்திய சி ஜின்பிங், சர்வதேச உதவிகளை வழங்குதல் மற்றும் கொவிட் 19 தடுப்பு மருந்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதும் உலகம் பூராவும் மக்களுக்கு கிடைக்கச் செய்வது போன்ற ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தார். அவரின் யோசனைகள் கொவிட் 19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை பெரிதும் ஊக்குவிப்பதற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் என்றும் அந்த அறிஞர்களும் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள்.

சீன ஜனாதிபதியின் உரை சகலருக்கும் ஆரோக்கியத்தை தரும் உலகளாவிய சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கை முன்னிலைப்படுத்துவதாக அமைந்தது; அது நெருக்கடிக்கு மத்தியில் சீனாவின் பொறுப்புணர்வை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

உலக சுகாதார நிறுவத்தின் உலகளாவிய சுகாதார பராமரிப்பு / தொற்றக்கூடிய – தொற்றாத நோய்கள் தடுப்புக்கான உதவிப் பணிப்பாளர் நாயகம் றென் மிங்குயி கருத்து கூறுகையில், “சீன ஜனாதிபதியின் யோசனைகள் மனித குலம் முழுவதற்குமான பொதுவான எதிர்காலத்துக்கான சமூகமொன்றை கட்டியெழுப்புவதில் சீனாவுக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கையை மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறது. அவரது உரை தொலைநோக்கும் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையையும் கொண்டது” என்று குறிப்பிட்டார். 

தொற்றுநோய் பரவலை எவ்வாறு பயனுறுதியுடைய முறையில் தடுத்து கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி மாத்திரமல்ல, பாதிக்கப்பட்ட நாடுகளின், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார மீட்சி மற்றும் சமூக அபிவிருத்திக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதைப் பற்றியும் விரிவாக சி ஜின்பிங் பேசினார் என்று றென் மிங்குயி குறிப்பிட்டார். 

அரபு மன்றம் என்ற பாக்தாத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிந்தனைக் குழுமத்தைச் சேர்ந்த ஈராக்கிய ஆய்வாளரான நதும் அலி அப்துல்லாஹ் கருத்து தெரிவிக்கையில், “மனித குலம் முழுவதும் பொதுவான தலைவிதியை கொண்டிருக்கின்றது; தற்போதைய தொற்றுநோயை தோற்கடிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்புக்கும் சீனா அதன் கதவுகளை திறந்துவிடுகிறது என்ற செய்தியை உலக சுகாதார மகாநாட்டில் சி ஜின்பிங்கின் உரை உலகுக்கு அனுப்பியிருக்கிறது” என்றார்.  

“ கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிகவும் பாராதூரமான ஒரு சோதனை. நாம் தனியொரு உலகில் வசிக்கிறோம் என்பதையும் பொதுவான தலைவிதியைக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மனித குலம் விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே உலகளாவிய அச்சுறுத்தல் ஒன்றுக்கு முன்னால் மனித குலம் ஐக்கியப்பட்டு நிற்க வேண்டும் ” என்று ரஷ்யாவின் நவீன கோட்பாட்டு அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் இகோர் ஷாட்ரோவ் கூறினார். 

தொற்று நோய்க்கு மத்தியில் சீனாவின் முயற்சிகள் பிரத்தியேகமாக குறிப்பிடத்தக்கவை என்று சுட்டிக்காட்டிய சீனாவின் ஷங்காய் நகரில் போலாந்தின் கவுன்சல் ஜெனரலாக முன்னர் பதவி வகித்த சில்வெஸ்டர் ஸாபார்ஸ், “ பெறுமதிமிக்க சீன அனுவத்தையும் நிபுணத்துவத்தையும் நவீன உபகரணங்களையும் தகுதியும் திறமையுமிக்க மருத்துவ அதிகாரிகளையும் ஏனைய பல நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சீனர்கள் செயற்படுகிறார்கள் ” என்று கூறினார்.

“ உலகளாவிய சுகாதார ஆட்சி முறையை பலப்படுத்த வேண்டிய அவசியமாகிறது. நாடுகள் ஒன்றுடன் ஒன்று நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும் நடந்துகொள்ளும்போது மாத்திரமே உலகளாவிய சுகாதார ஆட்சிமுறைக்கான ஒத்துழைப்பு கிடைக்கும்”என்று சீன -ஆபிரிக்க   உறவுகள் மீதான கவனக்குவிப்புடன் சர்வதேச உறவுகள் பற்றி ஆராயும்  கென்ய ஆய்வாளரான அட்ஹியர் கெவின்ஸ் கூறினார். 

சீனா உலகுக்கு தன்னை  திறந்துவிடுகிறது என்பதையும் கூட்டுப்பொறுப்பை பகிர்ந்துகொள்கிறது என்பதையும் சி ஜின்பிங் உலக சுகாதார நிறுவனத்தின் மகாநாட்டுக்கு ஆற்றிய உரை உறுதி செய்கிறது என்று சுட்டிக்காட்டிய பிரெஞ்சு எழுத்தாளரும் சீனவியலாளருமான சோனியா பிரெஸ்லர், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா அளித்துவரும் ஆதரவும் உதவியும் மிகப் பெரியவை. சகோதரத்துவம் அவசியமானது என்பதை  சி ஜின்பிங்கின் சீனத் தொலைக்நோக்கான “ ரியான்சியா (TIANXIA)” ( எல்லோரும் ஒரே வானத்தின் கீழ் வாழ்கிறோம் என்பது அதன் அர்த்தம்)  வெளிகாட்டுகிறது.