2020 ஏப்ரல் 06ம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட பெற்றோல்  (LP92) லீற்றரின் விலையை ரூ.5/-ஆல் குறைத்ததை மீள் திருத்தம் செய்வதற்கு லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.   

இத்திருத்தத்துடன் தற்போது லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் LP92 பெற்றோல் லீற்றரின் விலை ரூ.142/-என்பதுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அது லீற்றர் ரூ.137/- ஆகும். எவ்வாறாயினும் லங்கா IOC டீசல் விலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு சமமாகும். 

இது தொடர்பாக லங்கா IOC பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில் “கொவிட்-19 தொற்றின்போது இலங்கை மக்களை பாதுகாப்பதற்கும் அவர்களது நலன்களை மேலோங்கச் செய்வதற்கும்  அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு நாம் பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.

இலங்கை ஜனாதிபதியின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிசார் ஆகியோரின் கூட்டு முயற்சி ஊடாக இந்த வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது” என்றார் 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் “தற்போதைய இந்த தொற்று நிலைமையானது பல்வேறு பொருளாதார சவால்களை தோற்றுவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீள முன்னேற்றுவதற்கு அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்;கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

பொருளாதாரத்தை மீள மேம்படுத்துவதற்கு எப்போதும் நேர்மையான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வழங்கும் லங்கா IOC நிறுவனம் தடைகளற்ற வகையில் எரிபொருள் விநியோகத்தை நாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கொள்முதல் செலவு அதிகமாக இருந்தபோதிலும் 2020 ஏப்ரல் 06ம் திகதி முதல் லங்கா IOC 92 ரக பெற்றோலின் விலையை   5 ரூபாவால் குறைக்க அதுவே காரணம்.

எமது விலைகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன விலைகளுடன் பொருந்தும் வகையிலேயே இது செய்யப்பட்டது. டீசல் விலை 2019 மே மாதம் 14ம் திகதி முதல் ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்துக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுடன் சமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பாரிய அளவில் குறைவடைந்ததன் காரணமாக எரிபொருள் உற்பத்திகளுக்கான இறக்குமதி கட்டணத்துக்கான சுங்க வரி 2020 மார்ச் 14 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டதுடன் 2020 ஏப்ரல் 23ம் திகதி அவை மேலும் திருத்தம் செய்யப்பட்டன.

எவ்வாறாயினும் அதன் பின்னர் எரிபொருள் விலைகள் 100% இற்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று வெளிநாட்டு சந்தையில் பெற்றோல் பெரல் ஒன்றின் விலை 31.5 டொலராகும். 2020 ஏப்ரல் 22ம் திகதி அது 14.6 டொலராக பதிவாகியிருந்தது.

ஊரடங்கு மற்றும் முடக்கப்பட்ட நிலையிலிருந்து நாடுகள் மீண்டு உலக பொருளாதாரம் மீள மேம்படுவதுடன் இந்த விலைகள் காலத்திற்கேற்ப மீண்டும் வழமைக்கு திரும்புகின்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் கருத்து தெரிவித்த பேச்சாளர் “ தற்போதுள்ள சர்வதேச விலைகளுக்கமைய பெற்றோல் போன்று டீசல் தொடர்பாகவும் நாம் அதிக நட்டத்தை எதிர்கொள்கின்றோம்.

குறித்த குறுகிய காலத்துக்கு அந்த நட்டத்தை குறைப்பதற்கு LP92 ரக பெற்றோல் லீற்றருக்கு வழங்கும் ரூ.5/- விலை குறைப்பை மீள மாற்றுவதற்கு எமக்கு நேரிடும்.

2019-2020 நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் லங்கா ஐழுஊ நிறுவனம் ரூ.346 மில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் விலை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு தற்போதுள்ள வரி கட்டமைப்பை மீள திருத்தம் செய்வது சிறப்பதாக இருக்கும் என நாம் நினைக்கின்றோம்” என கூறினார். 

“வாடிக்கையாளர்களுக்கு நல்ல விலைக்கு வழங்கவும், மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு எமது பங்களிப்பை உயர்ந்த பட்சமாக வழங்கவும் லங்கா IOC நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.