(எம்.எப்.எம்.பஸீர்)

 தேர்தல்கள் ஆணைக் குழுவானது, கடந்த மார்ச் 17,18,19 ஆம் திகதிகளில்  வேட்பு மனுக்களை  ஏற்றுக்கொண்டமை சட்ட விரோதமானது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர்  பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் சார்பில் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்திக  தேவேந்ர இதனை  பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சார்பில் நீதிமன்றுக்கு அறிவித்தார். 

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போது, இந்த விடயம் பிரதம நீதியரசர் தலமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ர  தெரிவித்ததாவது,

 பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்துக்கு அமைவாக வேட்பு மனுக்களை, சாதாரண வேலை நாட்களிலேயே ஏற்க முடியும்.  அதன்படி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்ட மார்ச் 17,18,19 ஆம் திகதிகளில்  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை சட்டத்துக்கு முரணானதாகும்.  

மார்ச் 16 ஆம் திகதியும் விடுமுறைகள் சட்டத்துக்கு அமைய  பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போது, அந்த தினத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அப்படியானால் அதே விடுமுறைகள் சட்டத்தின் கீழ், அல்லது அந்த சட்டத்தை பயன்படுத்தி விடுமுறை தினமாக அரிவிக்கப்பட்ட 17,18,19 ஆம் திகதிகளில் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டமை சட்டத்துக்கு முரணானது' என தெரிவித்தார்.

 இதன்போது சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ரவை நோக்கி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீங்கள் இங்கு முன் வைப்பது ஆணைக் குழு உறுப்பினரின்  நிலைப்பாடா அல்லது தேர்தல்கள் ஆணைக் குழ்வின் நிலைப்பாடா என வினவினார்.

 அதற்கு சட்டத்தரனி ஹஸ்திக, இது ஆணைக் குழ்வின் நிலைப்பாடு இல்லை எனவும் ஆணைக் குழுவின் உறுப்பினரான தனது சேவை பெருநர் ரத்ன ஜீவன் ஜூலின் சார்பிலான வாதம் எனவும் தெரிவித்தார்.

 இதற்கு சட்ட மா அதிபர் சார்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.  சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா,  தேர்தல்கள் ஆணைக் குழு எடுத்த  முடிவொன்றினை அவ்வாணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என  தெரிவித்தார்.

 அதற்கு பதிலளித்த சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ர,  உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் தமது சேவை பெறுநர்  பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில்,  அதனால் அவரது நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவிக்க அவருக்கு உரிமை உள்ளது என  தெரிவித்தார்.