காதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 7ஆவது ஆண்டாக நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 35 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் நுவரெலியா, பண்டாரவளை, வெல்லவாய, புத்தள, வழியாக கதிர்காமத்தை சென்றடைவார்கள்.

இவர்கள் பாதயாத்திரையாக செல்லும் பிரதான நகரங்களிலுள்ள கோவில்களிலும் விகாரைகளிலும் தங்குவதாகவும் அங்கு அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

26 பேருடன் ஆரம்பமாகிய இந்த பாதயாத்திரையில் இன்னும் சில பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்த யாத்திரீகர்கள் பருவகாலம் முடியும் வரை கதிர்காமத்தில் தங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கதிர்காம ஆடிவேல் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 05ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளதாக கதிர்காம ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)