கொரோனா தாக்கம் ஒருபுறம் வாட்டி வதைக்க மறுபுறம் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முன் கொடுத்துள்ளனர்.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற  அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை 436 குடும்பங்களைச் சேர்ந்த 1433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக வீசும் பலத்த காற்றினால் கரையோரப் பிரதேச மக்கள் தங்கள் ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடற்தொழிலை  மாத்திரமே நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்திச் செல்லும் இவர்கள் தற்பொழுது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படும் வலுவான தாழமுக்கம்  எந்த நேரமும் சூறாவளியாக மாறலாம் என வலிமண்டல திணைக்களம் எச்சரித்துள்ளது.

கடற் பிரதேசத்தில் வீசும் காற்றின் வேகத்தால் வடக்கு, கிழக்கு கரையோர மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை மாத்திரமன்றி தமது மீன்பிடி படகுகளையும் பாதுகாக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வைரஸ் தாக்கம் காரணமாக சிறிதுகாலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாது, பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த இவர்கள் தற்போது காலநிலை சீர்கேட்டால் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேவேளை அலைகளின் வேகம் காரணமாக கடல் அரிப்புக்கும் ஈடு கொடுக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தமது வாழ்வாதாரத் தொழிலை தொடர முடியாமல் தத்தளிக்கும் மீனவர்களுக்கு, நிவாரணம் வழங்கவும் அவர்களின் துயரைத் துடைக்க வரும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இதேவேளை கிளிநொச்சியில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அக்கராயன் குளம் பகுதியில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்ததுடன் வயோதிபர் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அடைமழை காரணமாக அவர்கள் மேற்கொண்ட பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் மிகவும் நொந்து போயுள்ள மக்களை சீரற்ற காலநிலை மேலும் பாதித்து வருகின்றது. ஒரு வேளை உணவுவைக்கூட நிம்மதியாக தேடிப்பெற முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பின்மை,  சம்பளம் இன்மை, சுதந்திரமாக செயற்பாட முடியாத நிலைமை என பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில்,  இந்த சீரற்ற காலநிலை அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

ஒரு வகையில் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்