பிரேசிலில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் இறப்புகளும், புதிய தொற்றாளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணி நேரத்தில் 1,179 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த தொகை 17,971 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பிரேசிலில்  17,408 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதோடு, இது அந் நாட்டின் தொற்றாளர்களின்  மொத்த எண்ணிக்கையை 271,628 ஆக உயர்த்தியுள்ளது.

கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் அதிகரிப்பு

பெப்ரவரி மாதத்தில் பிரேசில் முதல் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தியதிலிருந்து, இதுவே பிரேசிலில்  ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் இறப்புகளும், புதிய தொற்றாளர்களும் பதிவான முதல் முறையாகும்.

பிரேசிலின் சாவோ போலோ மாநிலத்தில் மாத்திரம் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ்  தொற்றுக்களை கொண்ட நாடாக பிரேசில் இருந்தது.

இதனையடுத்து பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்க ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார்.

உலக அளவில் கொரோனாவினால்  3,24,889 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 இலட்சத்தை நெருங்குகிறது.