சீனாவுடனான "முழு உறவுகளையும் " துண்டித்துவிடப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் கடந்தவாரம் விடுத்த பகட்டுத்தனமான அச்சுறுத்தலுக்கு பீஜிங் ஏளனமாக அதன் பிரதிபலிப்பை வெளிக்காட்டியிருக்கிறது." அத்தகைய கிறுக்குத்தனம் உலகளாவிய ரீதியில் சீனா உயர்ச்சியடையத் தொடங்கிய நாள் முதல் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கவலையினதும் ஏக்கத்தினதும் ஒரு தெளிவான உப விளைபொருளாகும் " என்று சீன அரசாங்கத்தின் ஊதுகுழலான ' குளோபல் ரைம்ஸ் ' கருத்து வெளியிட்டிருக்கிறது." வொஷிங்டன் அதிகார வர்க்கம் தொற்றுநோய் தொடர்பில் கிலி கொண்டிருக்கிறது " என்றும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.

குளோபல் ரைம்ஸ் தெரிவித்த இரு கருத்துக்களின் தொனி துரதிர்ஷ்டவசமானது என்கிற அதேவேளை, அவை முற்றிலும்  உண்மையில்லாதவை என்று இல்லை.வல்லரசு அந்தஸ்துக்கு சீனாவின் உயர்ச்சி பற்றி அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும் கவலைகளைக்  கொண்டிருக்கின்றன. அவற்றில் சில நியாயபூர்வமானவை, வேறு சில மிகைப்படுத்தப்ட்டவை.திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனங்குழம்பிய நிலையில் இருப்பவராகத் தோன்றுகிற ட்ரம்ப் கொவிட் -- 19 நெருக்கடியை கையாளுவதற்கு கடைப்பிடித்த  தவறான அணுகுமுறையின் காரணமாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங், ஒப்பீட்டளவில்  சந்தேகமின்றி  தகுதிவாய்ந்தவராக நோக்கப்படுகிறார்.

முட்டாள்தனமானதும் நடைமுறைக்கு ஒவ்வாததுமான ட்ரம்பின் அச்சுறுத்தல், அவரின் குளறுபடியான நடத்தையை உருவகப்படுத்தி நிற்கிறது.அவரின் இலக்கு ஆச்சரியத்துக்குரியதல்ல.ட்ரம்பும் அவரது ' அமெரிக்கா முதலில் ' பரிவாரங்களும் சீனா அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களை திருடுவதன் மூலமும் நேர்மையற்ற வாணிப நடைமுறைகளிலும்  உற்பத்தித்துறையில்  தொழில்வாய்ப்புகளை நிர்மூலம் செய்வதிலும் ஈடுபடுவதன் மூலமும் ஏமாற்றிச் சூழ்ச்சிசெய்கிறது என்று நீண்டகாலமாகவே வாதிட்டுவந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் சீனாவின் இந்த செயற்பாடுகளை துண்டித்துவிட விரும்புகிறார்கள். அந்த நோக்கில் விரைவாக  முன்னெடுக்கப்படும் செயன்முறைகளை "அடக்குமுறை " என்று சீனா அழைக்கிறது.அதாவது சீன இறக்குமதிகள் மீது உயர்ந்த வரிவிதிப்புகள்,அமெரிக்க  உயர்தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மற்றும் சீனாவின் முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் சீனாவின் பிரமாண்டமான ரெலிகோம் நிறுவனமான ஹுவாவீயை இலக்குவைக்கும் புதிய நடவடிக்கைகளையும்  உள்ளடக்குவதற்காக கடந்தவாரம் விரிவுபடுத்தப்பட்டன.இவ்வருட ஆரம்பத்தில் அமெரிக்காவும் சீனாவும் விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இணங்கிக்கொண்ட வாணிப உடன்பாடு தற்போது ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

வெளியார் மீதான அச்சமும் பகைமையும், பொருளாதார மனக்குறைகள், அமெரிக்கா பிரத்தியேகமானது என்ற வலிமையான கருத்து ஆகியவையே சீனாவுடனான மோதலுக்கு தீனிபோடுகின்ற உணர்வுகளாகும்.அவைதான் 2016 ஆம் ஆண்டில் ட்ரம்ப் அணிதிரட்டிய வலதுசாரி தேசியவாத,மக்கள்வசிய, இனவெறிக் கூட்டணியின் ஆதாரங்களாகும்.வெறுப்பையும் பகைமையையும் வளர்கின்ற இந்த கூட்டணியைத் தோற்கடிப்பதே 2020 ஜனாதிபதி தேர்தல் சவாலாகும்.

இந்த பின்புலத்தை அடிப்படையாக வைத்து நோக்கும்போது, தற்போதைய உலகளாவிய  பொதுச்சுகாதார நெருக்கடி மேலும் மோசமடைந்ததற்கு சீனாவே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டுவதன் மூலமாக, தனது கொரோனாவைரஸ் பெருந்தோல்வியில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ட்ரம்ப் முயற்சிப்பார் என்பது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டதேயாகும்.உள்நாட்டு அரசியல் துருவமயப்பட்டு -- ஒழுக்கமும் நெறிமுறையும் சாராததாக இருக்கின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனை தாக்குவதற்கு கூட  தற்போதைய அனர்த்தத்தை ட்ரம்ப் பயன்படுத்துவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே.

இது இவ்வாறிருக்க, கொவிட் -- 19 நெருக்கடியின்போதும் அதற்கு முன்னரும் மேற்குலக ஜனநாயகங்கள் தொடர்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பர நடவடிக்கைகளும் மெய்யான கவலைகளுக்கான ஒரு காரணமாகும்.வூஹான் கொரோனாவைரஸ் பரவலின் பாரதூரத்தன்மை குறித்து உலகம் விழிப்புடன் இருக்கக்கூடியதாக நேரகாலத்தோடு எச்சரிக்கை செய்வதற்கு சி ஜின்பிங் தவறினார் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.ஆரம்பக்கட்டத்தில் மூடிமறைக்க முயற்சித்ததுடன் உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணை முயற்சிகளையும் தாமதிக்கச்செய்ததன் மூலம் சீன ஜனாதிபதி உலகிற்கு மிகப்பெரிய பொல்லாங்கைச் செய்துவிட்டார்.

 அடுத்து சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளும்  ஏற்றுக்கொள்ளமுடியாதவை. கொவிட் -- 19 நெருக்கடியை ஒரு மென் அதிகார ( Soft -- power triumph ) வெற்றியாக மாற்றிப்பயனடைய சீனா முயற்சித்தது ; குறைபாடுகளை அல்லதுசீர்கேடுகளை எடுத்துரைப்பவர்களை தாக்குவதற்கு கண்ணியமான முறையில் பேசத்தெரியாத இராஜதந்திரிகள் பயன்படுத்தப்பட்டனர் ;  மாற்றுக்கருத்துடையோர் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டனர் ; வைரஸ் தொற்றுநோய்க்கான காரணிகள் மற்றும் நெருக்கடி கையாளப்பட்ட முறை குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை பெய்ஜிங் நிராகரித்தது..இவையெல்லாம் சீனாவைப் பழிதூற்றுபவர்களின் கரங்களை பலப்படுத்திய அதேவேளை, நண்பர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பரந்தளவிலான மூலோபாய, பொருளாதார,  இராணுவ மோதலொன்றை ( இதை ஒரு புதிய பனிப்போர் என்று சில நிபுணர்கள் அழைக்கிறார்கள் )  தூண்டுவதற்கு உலகளாவிய வைரஸ் நெருக்கடிக்கு இடமளிப்பதன் மூலம் ட்ரம்பின் விளையாட்டையே பெய்ஜிங் அரசாங்கமும் விளையாடுவது தவறானதாகும். 1930 களில் உலக பொருளாதார மந்தநிலையின்போது ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் படுமோசமாக பாதிக்கப்பட்ட நிலைவரத்துக்கும்  இன்றைய சீன -- அமெரிக்க முரண்நிலைக்கும் இடையில்  சமாந்தரம்  வரைந்து அச்சந்தரும் விளைவுகள் பற்றி எச்சரிக்கையும் செய்யப்டுகிறது.

கடும் நெருக்கடியான இந்த தருணத்தில், பிரச்சினையின் சகல அம்சங்களையும் கருத்திலெடுக்கவேண்டியது முக்கியமானதாகும்.மேற்கில் உள்ள சிலர் எதிர்பார்த்ததைப் போன்று சீனா ஒரு லிபரல் ஜனநாயகமாக மாறியிருக்கவில்லை.ஆம், சின்ஜியாங், திபெத் மற்றும் ஹொங்கொங்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் அதிர்ச்சி தருகின்றன.சீனாவின் இணையவெளி அத்துமீறல்களும் தென்சீனக்கடலில் அயல்நாடுகளை வெருட்டும் நடவடிக்கைகளும் தவறானவை.அவை நிறுத்தப்படவேண்டும்.

அவ்வாறிருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக நோக்குகையில் தியனென்மென் யுகத்துக்குப் பின்னர் உலகுடனான சீனாவின் ஊடாட்டம் பல விதத்திலும் பயனுடையதாகவே இருந்துவந்திருக்கிறது.மாவோயிசம் ஒருபுறமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. இலட்சக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள்.மொத்தமாகப் பார்த்தால் தகராறுகள் அமைதிவழியில் தீர்த்துவைக்கப்படுகின்ற செழிப்பானதும் நிலையுறுதியானதுமான உலக ஒழுங்கொன்றை ஆதரித்து வந்திருக்கிறது.சீனா சோவியத் யூனியன் அல்ல.அது ஒரு போட்டிநாடு.சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றுத்தனமான தந்திரோபாயங்களில் ஈடுபடுகிறது.ஆனால்,சீனாவை எதிரியாக்குவதற்கு  ட்ரம்பைப் போன்ற பொல்லாங்குப் பேர்வழிகளுக்கு இடமளிக்கப்படாத பட்சத்தில்,  அது ஒரு எதிரியல்ல.

  (லண்டன் ஒப்சேர்வர் )