(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றிரவு 10 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 29 கொரோனா தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

இந்த 1021 தொற்றாளர்களில், 578 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த கடற்படை வீரர்களுடன் சேர்த்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 590 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

இன்றிரவு 10 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் 29 பேரும் கடற்படை வீரர்களாவர்.

இதனிடையே இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வயது கூடிய தொற்றாளர்காக கருதப்படும் பெண் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 96 வயதான அப்பெண் நேற்று வீடு திரும்பியதாக அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையின் விஷேட உடற் கூற்று வைத்திய நிபுணர் தமயந்தி தெரிவித்தார்.

பேருவளையைச் சேர்ந்த குறித்த பெண், அவர் வசித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் காரணமாக கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு வைத்தே, தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளார். இந்நிலையில் வெலிகந்த  ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதனையடுத்தே அவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 குறித்த பெண் அதிக வயிற்றோட்ட நிலைமையில் இருந்ததாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க வைத்தியர்கள் மிகக் கடுமையாக உழைத்ததாகவும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையின் விஷேட உடற் கூற்று வைத்திய நிபுணர் தமயந்தி குறிப்பிட்டார்.

இந் நிலையிலேயே சுமார் ஒரு மாத சிகிச்சையின் பின்னர் அந்த பெண் நேற்று பூரண குணமடைந்து வெளியேறியுள்ளார்.  அவருடன் சேர்த்து இன்று மட்டும் 10 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இதுவரை 569 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 209 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாணடர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் இலங்கையில் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.   442 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 135 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.