(எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் அமைப்பின்  விதிவிதானங்கள் பிரகாரம் பாராளுமன்றமானது  பகிரங்க நிதிகளின்  மீது ( பொது நிதி) பூரண கட்டுப்பாட்டை  கொண்டதாகும். அவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், மூன்று மாதங்களை கடந்தும் அப்பாராளுமன்றத்தை கூட்டாமல் இருக்க எந்த விதமான அரசியலமைப்பு ரீதியிலான அதிகாரமும் இல்லை. 

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் நிதிப் பயன்பாடுகள், கடன் பெறுகைகள் அனைத்தும் சட்டத்துக்கு முரணானது. என சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இன்று உயர் நீதிமன்றில் வாதிட்டார்.

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்த போதே,  ஐக்கிய மக்கள் சக்தியின் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  சம்பிக்க ரணவக்க - குமார வெல்கம ஆகியோர்  தாக்கல் செய்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது விடயங்களை தெளிவுபடுத்தி வாதங்களை முன்வைக்கும் போதே அவர்  மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

இன்றைய தினம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையானது, இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு இடம்பெறும் மண்டப அறையில் பரிசீலனைக்கு வந்தது. 

தற்போதைய சூழலில்  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என்பதால்,  நீதிமன்றுக்குள் சமூக இடைவெளியை பேனும் நோக்கோடு இவ்வாறு சம்பிரதாய அமர்வு மண்டபத்தில் இம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன.

பிரதம நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்   கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்பே இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

நேற்று, இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்  வாதங்களை முன்வைத்த நிலையில், இன்று 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றில் விடயங்கள் தெளிவுபடுத்தப்ப்ட்டன.  

குறிப்பாக இந்த ஒவ்வொரு அடிப்படை மனுவும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் போது, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையகையிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா, அம்மனுக்கள் தொடர்பில் தனக்கு அடிப்படை ஆட்சேபனங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். 

அது குறித்து சட்ட மா அதிபர் சார்பிலான வாதங்களின் போது அவர் விடயங்களை விரிவாக முன்வைக்கவுள்ள நிலையில், அதன் பின்னர் அந்த அடிப்படை ஆட்சேபங்களுக்கு பதிலளிப்பதாக  மனுதாரர்களின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். 

இதன்போது மனுக்களில் பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி செயலர் பி.பீ.ஜயசுந்தர சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் தமக்கும் மனுக்கள் தொடர்பில் அடிப்படை ஆட்சேபனக்கள் உள்ளதாக கூறியதுடன் அது குறித்தும் தனது வாதத்தில் விரிவாக முன்வைப்பதாக சுட்டிக்காட்டினார்.

 இந் நிலையில் இன்றைய வாதங்களை ஆரம்பித்து, முதலாவதாக  மாற்றுக் கொள்கைக்கான  தேசிய மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கிய சோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனு மீது, சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை முன்வைத்தார்.

' அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், மூன்று மாதங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்குள்  தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். 

 அதன்படி கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தை வர்த்தமானி ஊடாக கலைத்தார்.  அப்படியானால்  எதிர்வரும்  ஜூன் 2 ஆம் திகதிக்குள், தேர்தலை நடாத்தி பாராலுமன்றத்தை கூட்ட வேண்டும். அதுவே அரசியலமைப்பின் வழி காட்டல். 

 எனினும் தற்போதைய சூழலில்  ஜூன் 2 ஆம் திகதிக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நிலைமை  இல்லை என்பது உறுதியாக தெரிகின்றது.  அதனால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின்  வர்த்தமானி அறிவித்தல்  சட்டத்தின் முன்  வலுவற்றது. 

அதன்படி அந்த வர்த்தமானியை மையப்படுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியும், எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதியும் தேர்தலை நடாத்துவது என ஆதேர்தல்கள் ஆணைக் குழு வெளியிட்ட வர்த்தமானி அரிவித்தல்களும்  அதிகாரமற்றவை. 

தேர்தல் ஒன்றினை நடாத்துவது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் தான். ஆனாலும்  தற்போது மேலெழுந்துள்ள நிலைமையின் பிரகாரம்  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றினை நாடாத்த முடியாது என்பதுடன்  பாதுகாப்பான தேர்தல் ஒன்றினை நடாத்த முடியாது என்பதையும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்லனர்.' என தெரிவித்தார்.

இதனையடுத்து ரஞ்சித் மத்தும பண்டார, சம்பிக்க ரணவக்க - குமார வெல்கம ஆகியோரது மனுக்கள் மீது சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ வாதங்களை முன்வைத்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் அதனை மீள கூட்டாமல் இருக்க அரசியலமைப்பு ஊடாக அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

' பாராளுமன்றம் என்பது  ஒரு உயிர்ப்புள்ள நிறுவனம். அது இறக்காது. தொடர்ந்து உயிரோட்டத்துடன் இருக்கும். 

பாராளுமன்றத்தை கலைப்பது என்பது பாராளுமன்றத்தை முற்றாக மூடி விடுவது என அர்த்தம் அல்ல. பாராளுமன்ற கலைப்பு என்பது உயிரோட்டமான அந்த பாராளுமன்றத்துக்கு கொடுக்கப்படும் ஒரு இடைவேளை. அந்த இடைவேளையில் எப்போது அவசியம் ஏற்பட்டாலும் பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியும்.

 அதன்படி கடந்த மார்ச் 2 ஆம் திகதி வர்த்தமானி ஊடாக ஜனாதிபதியால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்குள் கூட வேண்டும். அவ்வாறு கூடாவிட்டால் ஜனாதிபதியின் மார்ச் 2 வர்த்தமானி அரிவித்தல் சட்டத்தின் முன் வலுவிழந்து விடும். 

அப்படியான சந்தர்ப்பம் ஏற்படுமாயின்,  கலைக்கும் போது இருந்த பாராளுமன்றம் அதிகாரம் உடையதான நிலைமைக்கு வரும். 

ஏனெனில் 3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்றம் இல்லாமல் செயற்பட முடியாது. நாட்டின் பகிரங்க நிதிகள் மீதான பூரண கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கே உள்ளது.  அரசியலமைப்பின் 148 ஆம்  சரத்தின் பிரகாரம் அந்த அதிகாரம் பாராளுமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 150 ஆம் சரத்தின் கீழ் உள்ள உறுப்புரைகளுக்கு அமைய திரட்டு நிதியத்திலிருந்து ஜனாதிபதி செலவினங்களை முன்னெடுப்பதற்குரிய  நிலைமைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. 

எனினும் அந்த செலவினக்கள்,  பகிரங்க சேவைகளுக்கு ( பொதுச் சேவைகளுக்கு)  என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் இடைக்கால கணக்கறிக்கை ஊடாக செலவீனங்களை முன்னெடுப்பதற்கான  இயலுமை முடிவுற்றுள்ளது. அப்படியானால்  அதன் பின்னர் முன்னெடுக்கபப்டும் செலவீனங்கள் சட்ட விரோதமானவை.

குறிப்பாக  நிதி மூலங்கள், குறித்த பூரண கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு உரியது.  கடன் பெறல், உச்ச கடன் எல்லை தொடர்பிலான நிர்ணயம் செலவீனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பாராளுமன்றத்தின் அனுமதி தேவை.  

இதனை கருத்தில் கொள்ளாது தற்போது கடன்களும் பெறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு கடன் பெற்றிருப்பின் அது சட்ட விரோதமானது.  எனவே குறிப்பிட்ட காலத்துக்குள் பாராளுமன்றத்தை கண்டிப்பாக கூட்டியாக வேண்டும்.  எனினும் தர்போதைய நிலையில்  சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலொன்றினை நடாத்துவதும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அப்படியானால்,  பாராளுமன்றம் தொடர்ந்தும் உயிர்ப்புடனேயே இருக்கும் நிலையில், ஜனாதிபதியின் மார்ச் 2 வர்த்தமானி அறிவித்தல் சட்ட வலுவற்றதாக அரிவிக்கப்பட்டு, கலைக்கப்படும் போது அதிகாரத்தில் இருந்த  பாராளுமன்றம் மீள ஏற்படுத்தப்படல் வேண்டும்.' என  சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து  மன்றில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்னம்,  ஜனாதிபதியும் அமைச்சரவையும் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தற்போதைய நிலைமை 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கங்களை தவிடுபொடியாக்குவதாக உள்ளதாகவும்  சுட்டிக்காட்டி வாதிட்டார். 

இதனையடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் முன்வைத்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீது விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட் வாதிட்டார். 

அரசியலமைப்பின் விதிவிதனக்கள் பிரகாரம் தேர்தலை நடாத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கே உள்ளதாகவும், அதனால் தேர்தல்கள் ஆணைக் குழு தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுத்த முடிவு அல்லது தீர்மானம் முற்றிலும் அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனவும் அவர் வாதிட்டார்.

' இங்கு தேர்தல்கள் ஆணைக்குழு, கண்டிப்பாக மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்தி  பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்பதை அறிந்து ஜானதிபதிக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையும் , உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தையும் பெற்று செயற்படுமாறு இரு வேறு கடிதங்கள் எழுதியுள்ளது. எனினும் ஜனாதிபதி அரசியலமைப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டிய இந்த விடயத்தில் உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை பெற்றுக்கொள்வதை மறுத்துள்ளார். 

 பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கு மேல் மீள கூட்டப்படாமல் இருக்க அரசியலமைப்பின் இடமில்லை.  8 ஆவது பாராளுமன்றத்தை கலைத்து கடந்த மார்ச் 2 ஆம் திகதி   ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்தப்பட வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றம் மே 14 ஆம் திகதி கூட வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தது. 

 எனினும் ஜனாதிபதியின் அந்த தீர்மானம் பிரகாரம் தேர்தலை நடாத்தவோ புதிய பாராளுமன்றத்தை கூட்டவோ முடியாமல் போயுள்ளது. எனவே ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வலுவிழந்த ஒரு ஆவணமாகும். 

 அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரைக்கு அமைய  பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.  அதன்படியே பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியில் ஏப்ரல் 25 இல்  பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 அப்படியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியை மாற்றி  ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் முற்று முழுதாக அரசியலமைப்புக்கு முரணானது.' என வாதிட்டார்.

முன்னதாக, 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தககல் செய்யப்பட்டுள்ளன. அதில் 'அரசியலமைப்பின் பிரகாரம்,  பாராளுமன்றம்  கலைக்கப்பட்ட தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி  அப்போதைய பாராளுமன்ரத்தை  கலைத்து வர்த்தமானி அறிவித்தல் பிறப்பித்த நிலையில்,  அதில் ஏப்ரல் 25 ஆம் திகதி  பொதுத் தேர்தல் இடம்பெறும் என  திகதி குறிக்கப்பட்டிருந்தது. 

எனினும் தொடரும் கொவிட் 19 நிலைமை காரணமாக  ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாமல் போனதுடன்,  தேர்தல் திகதியை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு பிற்போட தேர்தல்கள் ஆணைக் குழு  தீர்மானித்தது.

இவ்வாறு ஜூன் 20 ஆம் திகதிக்கு பொதுத் தேர்தல் திகதியை நிர்ணயம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதாகும்.

பாராளுமன்றத்தை கலைத்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்ட முடியாமல் போனமை ஊடாக, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்தின் முன்னர் வலுவிழந்ததாக அறிவிக்க வேண்டும். 

அத்துடன் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்தான 2172/03 ஆம் இலக்க   தேர்தல்கள் ஆணைக் குழுவின் வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்தல் வேண்டும். ' என தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அனைத்திலும் சுட்டிக்காட்டப்பட்டு  தேர்தல் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைக்கால தடை உத்தரவுகளும், இரு வர்த்தமானிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளும் கோரப்பட்டுள்ளன.

இதனைவிட இந்த உரிமை மீறல் மனுக்களுக்கு ஆதரவாக ஒரு  இடையீட்டு மனுவும் எதிராக 12 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.