நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' திரைப்படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டால், நத்தார் விடுமுறை தினமான டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஒருவரின் படத்தின் தொலைக்காட்சி உரிமை படம் வெளியீட்டுக்கு முன்னரே விற்பனையாகிறது என்றால் அது சிவகார்த்திகேயன் நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என்று திரை உலக வணிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் என இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகிறது.

இதில் 'கோலமாவு கோகிலா' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'டாக்டர்'. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. இன்னும் 10 சதவீத காட்சிகளை, கோவாவில் படமாக்கப்பட வேண்டும். 

தற்போது கோவா மாநிலம் கொரோனா  பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசு அனுமதி வழங்கியவுடன் விரைவில் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும், நவம்பர் மாதத்திற்குள் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டால், டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே சென்னையை அடுத்த நூறாண்டு பாரம்பரியம் கொண்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 'அனு' என்ற வெள்ளைப்புலியை கடந்த இரண்டாண்டுகளாக தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் அதனை இந்த ஆண்டும் நீட்டித்திருக்கிறார். இதற்காக பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் தெலுங்கு நடிகை பிரியங்கா அருள் மோகன் ஜோடியாக நடிக்க, நடிகர் வினய்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.