சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர் என்பது ரோஜா இதழ்கள் தூவிய மெத்தையல்ல எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு  இன்றையதினம் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய  இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் நினைவு தின விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற தேசிய படைவீரர்கள் நினைவு தின விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.

படையினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கு உறுதி செய்யப்படும். உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த நாட்டை அனைவரும் கண்ணியமாக வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவதற்கு முழுமையான அர்ப்பணிப்பு நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்த படைவீரர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்களை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தில் 20 வருடங்கள் செயற்திறமான சேவையில் ஈடுபட்ட அதிகாரி என்ற வகையிலும் பின்னர் 10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராகவும், ஒரு பிரஜை என்ற வகையிலும் எமது படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நான் நன்கறிவேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தத்தின் வலிகள் தனக்கு நன்றாக தெரியும் என்பதால் பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

படைவீரர்கள் உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த இந்த நாட்டை அனைத்து பிரஜைகளும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவது படைவீரர்களுக்கு செய்யும் உயர்ந்த கௌரவமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனதீர வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முப்படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

நினைவு தின விழா முழுமையாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி இடம்பெற்றது.

மல்வத்தை, அஸ்கிரிய பீடங்கள் உள்ளிட்ட மூன்று நிகாயக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மகாசங்கத்தினர், கார்டினல் அவர்கள், ஏனைய சமயத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தலைவர்கள், முன்னாள் கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படை பிரதானி உட்பட படைவீரர்கள், படைவீரர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.