(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்தரப்பினர் தெரிவு செய்வதே ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கான பிரதான காரணம். முரண்பாடுகளுக்கு மத்தியிலே இவர்கள் பொதுத்தேர்தலுல் போட்டியிடுவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எதிர் தரப்பினர் தங்களின் சுய அரசியல் தேவைகளை நிறைவேற்ற விமர்சிக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்தரப்பினர்  நியமித்தமை  தவறான செயற்பாடாகும். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி தற்போது பிளவடைந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை  நாட்டு மக்கள் புறக்கணித்து விட்டார்கள். 30 வருட கால யுத்தம் நிறைவு பெற்று 11வது வருட வெற்றியினை நிறைவு செய்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியினர் அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தினரை சர்வதேச மட்டத்தில் குற்றவாளியாக்கினார்கள். இந்த நிலைமை தற்போது முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கியதன் காரணமாகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த வெற்றி பொதுத்தேர்தல் ஊடாக மேலும் பலப்படுத்தப்படும் என்றார்.