சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் அரங்கில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பதற்கு இங்கிலாந்து நடுவர் இயன் கூல்ட்தான் காரணம் என தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோருக்கிடையில் சமூக வலைத்தளமொன்றில் ஊடாக நடைபெற்ற  கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இரட்டை சதத்தை இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் அடித்தார். அவர் எங்களுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியரில் நடந்த போட்டியிலேயே அச்சாதனையை படைத்தார். உண்மையைக்கூற வேண்டும் என்றால் அவர் அந்த போட்டியில் 190 ஓட்டங்களை கடந்த பிறகு ஆட்டமிழந்திருக்க வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எனது பந்து வீச்சில் நல்ல எல்.பி.டபிள்யூ.வை வழங்க நடுவர் இயன்  கூல்ட் மறுத்து விட்டார்.

ஏன்  ஆட்டமிழப்பு வழங்கவில்லை என்பதுபோல் நான் நடுவர் இயன்  கூல்ட்டை பார்த்தேன். அப்போது அவர், சுற்றிப்பாருங்கள் இந்த நேரத்தில் (இரட்டை சதத்தை நெருங்கியபோது) நான் விரலை உயர்த்திருந்தால் ஹோட்டலுக்கு திரும்பிச் செல்ல முடியாது (ரசிகர்களால் ஆபத்து நேரிடலாம் என்பதை சுட்டிகாட்டி) என்பதை உணர்த்தும் விதமாக என்னை நோக்கினார் என்று ஸ்டெய்ன் தெரிவித்தார்.

அந்த போட்டியில் சச்சின் முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 200  ஓட்டங்களை குவித்து அமர்க்களப்படுத்தியதோடு இந்திய அணி 400 ஓட்டங்களை கடக்கவும் வித்திட்டார். இதில் ஸ்டெய்னின் பந்துவீச்சில், சச்சின் 31 பந்துகளை எதிர்கொண்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பந்துவீச்சிலும் ஸ்டெய்ன் எல்.பி.டபிள்யூ. கேட்டு ‘அப்பீல்’ செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சச்சின் 190 களில் இருந்தபோது ஸ்டெய்னின் ஓவர்களில் 3 பந்துவீச்சுகளை மாத்திரமே சந்தித்துள்ளார். அந்த மூன்று பந்தும் துடுப்பு மட்டையில் பட்டுள்ளது. ஸ்டெய்ன் எதை நினைவில் வைத்து இவ்வாறு கூறுகிறார் என்று ரசிகர்கள் அவரை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.