கொரோனா வைரஸ் தொடர்பில் அன்றாடம் புதிய புதிய தகவல்கள் வெளி வந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில் வீதிகளிலே கிருமி நாசினி தெளிப்பது  வைரஸை கொல்லாது எனவும், இது ஆரோக்கியத்திற்கு கேடானது என்றும் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது 

சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸை கட்டுப்படுத்த பொதுவெளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இது மக்களுக்கு தோல் பாதிப்பு, கண் எரிச்சல் என்பவற்றை ஏற்படுவத்துவதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருவது  பயனற்றது, இது வைரஸையும் வேறு எந்த கிருமிகளையும் கொல்லாது. ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்றும் குப்பைகளில் பட்டு செயலிழந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.

நடைபாதைகள், வீதிகளில் கொரோனா பரவும் என்று கருதப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தனி நபர் மீது கிருமிநாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குறித்த பகுதிகளில் கிருமி நாசினி மருந்து நனைக்கப்பட்ட துணி மூலம் துடைப்பதால் கிருமிகளை அழிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

எந்தளவு தூரம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தாலும்,  இந்த வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.

அமெரிக்காவில் வைரசினால் பாதிக்கப்பட்டோரின் தொகை 15 இலட்சத்தையும் கடந்து விட்டதாகவும் நேற்று வரை 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது.

 இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை  3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.

இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற தவறினாலும், சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்கத் தவறினாலும் வைரசை முற்றாக ஒழிக்க முடியாத நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும் .

எனவே மக்கள் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்