வரலாற்றில் முதன் முறையாக உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு மண்டபத்தில் நடந்த விசாரணை : 3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வுகள் இன்றி நாடு இயங்க முடியாது - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதம்

Published By: J.G.Stephan

19 May, 2020 | 08:52 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)



பாராளுமன்ற அமர்வொன்று இன்றி, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று உயர் நீதிமன்றில் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் உறுப்புரைகளை ஆதாரம் காட்டி மேற்படி வாதத்தை முன்வைத்த  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்போது சட்ட ரீதியாக வலுவற்ற ஆவணம் எனவும், அதனால் தற்போது, குறித்த திகதியில் இருந்த பாராளுமன்றம் உயிர்ப்புள்ளது எனவும் வாதிட்டார்.



2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக்கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் இன்று பரிசீலனைக்கு வந்த போதே மனுதாரர் சார்பில் வாதங்களை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி வாதிட்டார்.

இன்றைய தினம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையானது, வரலார்றில் முதன் முறையாக, உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு இடம்பெறும் மண்டப அறையில் பரிசீலனைக்கு வந்தது.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என்பதால்,  நீதிமன்றுக்குள் சமூக இடைவெளியை பேணும் நோக்கோடு, இவ்வாறு சம்பிரதாய அமர்வு மண்டபத்தில் இம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன.

 பிரதம நீதியரசர்  ஜனாதிபதி சட்டத்தரணி  ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான, விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்பே இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

 இந்த விவகாரத்தில் 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் 13 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் அவையனைத்தும் ஒன்றாக பரிசீலிக்கப்படும் என்பதையும்  பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய பரிசீலனையின் ஆரம்பத்தில் திறந்த மன்றில் அறிவித்தார்.

 அதன்படி முதலில் மனுதாரர்களின் வாதங்களும் பின்னர்  பிரதிவாதிகளின் வாதங்களுக்கும்  அவகாசம் வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய, மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணி பிரசன்னங்களை பதிவு செய்தார். 

அவர்களின் வாதங்களைத் தொடர்ந்தே இடையீட்டு மனுதாரர்கள் தொடர்பில் அவகாசம் வழங்கப்படும் என இதன்போது பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி முன்வைக்கப்பட்டுள்ள  8 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சார்பிலும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ,  சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா, ஜனாதிபதி சட்டத்தரனி ஜெப்ரி அழகரட்னம்,  ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட், ஜனாதிபதி சட்டத்தரணி சொக்ஸி உள்ளிட்டோர் மனுதாரர் சார்பில் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

பிரதிவாதிகள் சார்பில்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வா,  பி.பீ. ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,  தேர்தல்கள் ஆணைக் குழு, அதன் இரு ஆணையாளர்கள் சார்பில் சில வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும் சில வழக்குகளில் சட்டத்தரணி அரூதி பெர்ணான்டோவும் ஆஜராகவுள்ளனர். ஆணைக் குழுவின்  உறுப்பினரான ரத்ன ஜீவன் ஹூல் சார்பில் சட்டத்தரணி  அனில் மத்தும ஆஜராகின்றார்.

இதன் போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா,  இந்த அடிப்படை உரிமை மீறல்  மனுக்கள் தொடர்பில்  தமக்கு அடிப்படை ஆட்சேபனங்கள் உள்ளதாக கூறினார்.

இதன்போது, மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. 

இந்நிலையில் தமது ஆட்சேபனத்தை சுருக்கமாக  முன்வைக்குமாறு பிரதம நீதியரசர்  ஜயந்த ஜயசூரிய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வாவுக்கு தெரிவித்தார். அதற்கும் சேர்த்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பதிலளிப்பார் என அவர் சுட்டிக்காட்டினார்.

 இதனையடுத்து, 'இந்த மனு கால வரையறைக்கு முரணானது.  சில மனுக்களில்  கட்டாயமாக பிரதிவாதி தரப்பாக பெயரிடப்பட வேண்டிய  ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர் எனும் தரப்பு பெயரிடப்படவில்லை.  இதனால் மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க இந்த மனுவை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது. ' என தனது ஆட்சேபனத்தை பதிவு செய்தார்.

 இதன்போது மற்றொரு பிரதிவாதியான ஜனாதிபதி செயலர் பி.பீ.ஜயசுந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா, இரு அடிப்படை அட்சேபனங்களை முன்வைத்தார்.  இம்மனுக்களில் விடயங்கள் மறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சட்டத்துக்கு முரணானவை எனவும் அவர் தனது ஆட்சேபனத்தை முன்வைத்தார்.

 இந்த அடிப்படை ஆட்சேபனைகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரையை ஆதாரம் காட்டி,  சட்ட மா அதிபரை தமது மனுக்களில் பிரதிவாதியாக சேர்த்துள்ளமையையும் சுட்டிக்காட்டி தமது மனுக்கள் பூரணமானவையே என பதிலளித்தார்.

 இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணி சரித்த குணரத்ன,  ஊடகவியலாளர்  விக்டர்  ஐவன் உள்ளிட்ட எண்மர் தாக்கல் செய்த இரு அடிப்படை உரிமை மீறல்  மனுக்கள் தொடர்பிலும் விடயங்களை தெளிவுபடுத்தி வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார்.

' அரசியலமைப்பின் 70 (1)  உறுப்புரை பிரகாரம்,  பாராளுமன்றத்தை  ஒத்தி வைத்தல், கலைத்தல், மீள பாராளுமன்றை கூட்டல் ஆகிய அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உள்ளன. எனினும் அதனை தன்னிச்சையாக அவர் செயற்படுத்த முடியாது. அதனை செயற்படுத்துவதற்கென  கட்டுப்பாடுகள் உள்ளன. 

 பாராளுமன்றத்தின் கீழேயே நாட்டின் முழுமையான  நிதிக் கட்டுப்பாடு உள்ளது. அது தொடர்பில் ஏனைய சட்டத்தரணிகள் விரிவாக கருத்துக்களை முன்வைப்பர் என நினைக்கின்றேன்.  வரிப்பணம், கடன் உள்ளிட்ட அனைத்தின் கட்டுப்பாடும் பாராளுமன்றத்திடம் உள்ள நிலையில் பொதுநிதி பயன்பாடு தொடர்பில் பூரண கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமே உள்ளது. 

 ஒரு நாட்டில் பாராளுமன்றம் இயங்கவில்லை என்பது, அங்கு ஜனநாயகம் இல்லை  என்பதையே வெளிக்காட்டும்.  பாராளுமன்றம் என்பது எப்போதும் உயிரோட்டதுடன் இருக்கும் ஒரு இடம். 

அதனை கலைப்பது என்பதன் பொருள்,  அந்த சபைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்தல் என்பதாகும். மாற்றமாக பாராளுமன்ற செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவது அதன் பொருளாகாது. பிரித்தானிய பாராளுமன்ற முறைமையைக் கொண்டுள்ள எமக்கு அந்த சம்பிரதாயங்கள் இதனை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

 முன் கூட்டியே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கும் போது  ஒரே அறிவித்தலில் மூன்று விடயங்களை உள்ளீர்க்க வேண்டும். ஒன்று  பாராளுமன்றை கலைக்கும் திகதி, தேர்தலுக்கான திகதி, புதிய பாராளுமன்றம் கூடும் திகதி என்பனவே அவை. அவை அனைத்தும் மூன்று மாதங்களுக்கு உட்பட்ட  காலப்பகுதிக்குள் இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும்  கலைக்கப்பட்ட  குறித்த பாராளுமன்றத்தின்  உத்தியோகபூர்வ அதிகார காலம் முடிவடைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் இருந்தது. எது எப்படியோ, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்  நாலரை வருடங்கள் பூர்தியானதும் பாராளுமன்றம்  கலைக்கப்பட்டுவிட்டது.

 இவ்வாறான முன் கூட்டிய கலைப்பு, எவ்வாறு செய்யப்படல் வேண்டும் என அரசியலமைப்பு தெளிவாக கூறியுள்ளது. அரசியலமைப்பின் 70 சரத்தின் 5 உறுப்புரையின் (அ) உப உறுப்புரை  அது குறித்து பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றது.

'5 (அ) பாராளுமன்றத்தை கலைக்கின்ற ஒரு பிரகடனம், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு திகதியை அல்லது திகதிகளை நிர்ணயித்தல் வேண்டும். அத்துடன் குறித்த பிரகடனத்  திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பிற்படாத ஒரு திகதியில் கூடுமாறு புதிய பாராளுமன்றத்தை அழைத்தலும் வேண்டும்.'

5 (இ) அ, ஆ வில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான பிரகடனம் ஒன்றின் ஊடாக பாராளுமன்றின் முதலாவது கூட்டத்துக்கு என நிர்ணயிக்கப்பட்ட திகதியானது, பின்னரான பிரகடனம் ஒன்றின் மூலம் வேறுபடுத்தப்படலாம். எனினும் பின்னரான பிரகடனத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் திகதியானது, அத்தகைய மூல பிரகடன திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு பின்னான ஒரு திகதியாக இருத்தல் வேண்டும்.' என அந்த உறுப்புரைகளில் தெளிவாக கூறியுள்ளது.

அப்படியானால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள்  புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.

இந் நிலையில் தான் கடந்த  மார்ச் 2 ஆம்  திகதி  பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.  பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி  இடம்பெறும் எனவும் மீள பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடும் எனவும்  அது குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த திகதிகள் அனைத்தும் தற்போது காலாவதியகையுள்ளன. எனவே சட்டத்தின் முன் குறித்த வர்த்தமானி தற்போது வலுவிழந்தது.

 இதனை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் வரை வரத்தேவையும் இல்லை. எனினும் சிலர் அந்த  ஆவணம் வலுவுள்ள ஆவணமாக கருதுவதால், உயர் நீதிமன்றின்  உத்தரவொன்றினை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி தேர்தல்கள் ஆணைக் குழுவும் கடந்த மார்ச் 12 ஆம் திகதி முதல் வேட்பு மனுக்களையும் கோரி ஏற்றுக்கொண்டது.

 இந்த தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்ற இக்காலப்பகுதிக்குள் தான், அதாவது,  கடந்த மார்ச் 11 ஆம் திகதி  உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றை ஒரு உலகளாவிய தொற்றாக பிரகடனம் செய்தது. .

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறித்த தொற்றுநோய் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக  வேட்புமனுக்கள்   ஏற்கப்பட்டன.  அந் நடவடிக்கை மார்ச் 12 முதல் தொடர்ந்து மார்ச் 19 ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்த காலப்பகுதிக்கு  உட்பட்ட  15 ஆம் திகதி ஒரு ஞாயிறு தினம். 16 ஆம் திகதி திங்கட் கிழமை. அதனை பொது  விடுமுறையாக விடுமுறைகள் சட்டத்தின் 10 (1) அத்தியாயம் பிரகாரம் அறிவித்தனர். அதே சட்டத்தை பயன்படுத்தி, அடுத்து வந்த 17,18,19 ஆம் திகதிகளையும் பொது விடுமுறை தினமாக அறிவித்தனர். அதன்படி வேட்பு மனுதாக்கல் செய்ய வழங்கப்படும் 7 நாட்களில் 5 நாட்கள் விடுமுறை நாட்களாகும்.  16 ஆம் திகதி திங்களன்று விடுமுறையால்  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது  என கூறும் தேர்தல்கள் ஆணைக் குழு, 17,18,19 ஆம் திகதிகளில் ஏற்றுக்கொண்டுள்ளது. 

 அப்படியானால் இங்கு எப்படி நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றினை எதிர்ப்பார்க்க முடியும்?

 எல்லா வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட பின்னர் ஆணைக் குழு சட்ட மா அதிபரிடம், விடுமுறை  தினம் குறித்து ஆலோசனை கோரியுள்ளது. சட்ட  மா அதிபரும் ஒரு  சுருக்க கடிதத்தை பதிலாக அனுப்பியுள்ளார். எனினும் அதன் சட்ட ரீதியிலான தன்மை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.

அவ்வாறான பின்னணியில் தற்போது தேர்தல்  ஜூன் 20 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு திகதி அறிவித்துள்ளது.

அரசியலமைப்பில் மிகத் தெளிவாக, தேர்தல், பாராளுமன்ற புதிய கூட்டத் தொடர் மூன்று மாதங்களுக்குள் இடம்பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் 2 ஆம் திகதி மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. அப்படியானால் எப்படி ஜூன் 20 ஆம் திகதியை தேர்தல் திகதியாக அறிவிக்க முடியும். தேர்தல்கள் ஆணைக் குழு, அரசியலமைப்பை கருத்தில் கொள்ளாது தேர்தல்கள் சட்டத்தை மட்டும் பார்த்து கண்மூடித்தனமாக முடிவெடுத்துள்ளது. 

அப்படியானால்  ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலும் சட்ட வலுவற்றது. இந்த முன் கூட்டிய தேர்தல் ஒரு அரசியல் செயற்பாடு மட்டுமே என தோன்றுகின்றது. கண்டிப்பாக இது ஒரு அரசியல் நடவடிக்கை. ஜனாதிபதி,  தனது கட்சியின் வெற்றி, ஒரு குழுவின் வெற்றிக்காக இந்த அரசியல் தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்.

 கொவிட் 19 அச்சுறுத்தல் இருந்தும் கூட இவ்வாறானதொரு முடிவுக்கு அவர் சென்றமை அதனையே உணர்த்துகின்றது. தற்போதைய சூழலில், ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் கூட சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது. தேர்தல் திகதியைக் கேட்டால்  தேர்தல்கள் ஆணைக் குழு, அதனை கொவிட் 19 தீர்மானிக்கும் என பிரசித்தமாகவே பதிலளித்துள்ளனர்.

 அப்படியானால் கண்டிப்பாக கொவிட் 19 காரணமாக பாரிய உயிர் அச்சுறுத்தல் உள்ளது.

 இந்த சூழலில், தேர்தலை நடாத்தினால் எமது தேர்தல் சட்ட விதிகளின் படி,  செயற்பட்டால் தொற்று பரவலுக்கான சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கும்.

 மக்களின் ஜனநாயக உரிமை மதிக்கப்படல் வேண்டும். தேர்தல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும், எல்லா உரிமைகளையும் விட உயிர் வாழும் உரிமையே முதன்மை உரிமை. தற்போதைய சூழலில் தேர்தல் எமது சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடாத்த முடியுமா?

அதனை தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறே சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடாத்துவதாயின்  சட்ட திட்டங்களில்  மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கங்கலுக்காக  மக்களின் உயிர்களுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே பாராளுமன்றம்  கலைக்கப்பட்டது தொடர்பில் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்ட  வர்த்தமானி அறிவித்தல் தற்போது வலுவிழந்த  வெற்று ஆவணம். பாராளுமன்றம் என்பது எப்பொழுதும் உயிர்ப்புள்ள ஒரு நிறுவனம்.  மூன்று மாதங்களுக்கு மேல் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒன்று நடாத்தப்படாமல்  நாடு இயங்க முடியாது.

அரசியலமைப்பின் 6 ஆம் திருத்தச் சட்டத்தை மையப்படுத்திய விஸ்வநாதன் எதிர் லியனகே எனும்  மனு தொடர்பில் உயர் நீதிமன்றின் நிலைப்பாட்டை இங்கு ஞாபகப்படுத்துகின்றேன்.  நீதிமன்ற கட்டமைப்பை அதனூடாக எவ்வாறு உயர் நீதிமன்றம் பாதுகாத்ததோ, அதே போல் பாராளுமன்றத்தையும் காக்கும் பொறுப்பு இம்மன்றுக்கு உள்ளது என்பதை  கூறுகின்றேன்.' என தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான 2 ஆம் நாள் விசாரணைகள் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலைய நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவண முத்து தாக்கல் செய்த குறித்த மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா முதலில் இன்று வாதங்களை சமர்ப்பிக்கவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08