Published by T. Saranya on 2020-05-18 20:03:04
( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் , சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை ஊடாக அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் கமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அம்மனு ஆராயப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில், இன்று மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட், இந்த வழக்கு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியாமன ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள, இதுவரை ஹிஜாஸின் சட்டத்தரணிகளுக்கு நியாயமான காலம் சி.ஐ.டி.யினரால் வழங்கப்படவில்லை எனவும், அதனால் சட்டத்தரணிகளுக்கு அவரை சந்திக்க உத்தரவொன்றினை விடுக்குமாறும் கோரினார்.
இந்நிலையில், இன்று மன்றில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே, இஜ்ம்மனு தொடர்பிலான அறிவித்தல் தனக்கு கடந்த வெள்ளியன்றே கிடைத்ததாகவும், மனு தொடர்பில் விடயங்களை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறும் கோரினார்.
அத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட்டின் கோரிக்கை தொடர்பிலும் அடுத்த தவணையில் தான் மன்றுக்கு வாதங்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத தன்னை கைது செய்தமை, தடுப்புக் காவலில் வைத்துள்ளமையால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரியே சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி இதுவரை மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சட்டத்தரணிகளின் சேவையைப் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்ப்படும் போதும் கைது செய்யப்படுகின்றமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. திலகரத்ன, பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக உள்ளிட்ட 06 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, அவரின் உறவினர்களால் ஏற்கனவே இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.