Published by T. Saranya on 2020-05-18 19:03:41
(ஆர்.யசி)
"அம்பன்" சூறாவளி இலங்கையின் திருகோணமலை பகுதியில் இருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனினும் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகின்றது.
கடந்த 15 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக மாற்றமடைந்துள்ள நிலையில் அதன் தாக்கம் இலங்கையையும் பாதித்து வருகின்றது.
எனினும் "அம்பன்" சூறாவளி இலங்கையின் திருகோணமலையில் இருந்து சுமார் 740 கிலோமீட்டர் தொலைவில் பங்களாதேஷ், கொல்கத்தா பக்கமாக நகர்வதால் இலங்கைக்கு நேரடியான தாக்கங்கள் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே படிப்படியாக இலங்கையின் திசையை விட்டு நகர்வதாக அறிகுறிகள் தென்படுவதாக கூறும் அத்திணைக்களம் நாட்டில் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு காணப்படும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஒருசில பகுதிகளில் மழைக் காலநிலை தொடர்கின்ற நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் நாட்டில் கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
எனினும் 20 ஆம் திகதியின் பின்னர் காலநிலை சீரடையும் தன்மைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
அதேபோல் மன்னார், யாழ்ப்பாணம், அம்பாறை, பொத்துவில், அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை கடல் பகுதிகள் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுவதால் மீனவர்கள் எவரும் மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக நாட்டில் பாரிய அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகாது போனாலும் கூட தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் ஆகவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட பிரதேசங்களில் தொடர்ந்தும் அதே அறிவுறுத்தல் விடுப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய காலி, மாத்தளை, இரத்தினபுரி களுத்துறை, கேகாலை, மாத்தளை, கண்டி, குருநாகல், நுவரெலியா ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் கடந்த தினங்களில் பெய்த கனமழை காரணமாக மலையகத்தின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. ஆகவே நீர்தேக்கங்கள் அண்மையில் வாழும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.