இன்று நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்டுக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவியது தொடர்பான  தீர்மானத்தை 62 நாடுகள் தாக்கல் செய்ய உள்ளன.

உலகம் முழுவதும் தற்போது வரை 48 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்து 16 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலான நாடுகள் கொரோனா பரவலைத் தடுக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும் ஒன்றுக்கொன்று உதவி வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக 73 ஆவது உலக சுகாதார சட்டமன்றத்திற்கு (WHA) முன்மொழியப்பட்ட  தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா உட்பட 62 நாடுகள் அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கூட்டு முயற்சியை ஆதரித்து உள்ளன. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான அவற்றின் காலக்கெடு பற்றிய விசாரணையைத் தவிர, கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் விரிவான விசாரணைக்கு இந்த அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக  உலக சுகாதார ஸ்தாபனத்தின்  ஒருங்கிணைந்த சர்வதேச சுகாதார நடவடிக்கையில்  இருந்து பெற்ற அனுபவங்களையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

கடந்த மாதம், கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு அவுஸ்திரேலியா ஆகும். 

அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து கொண்டு வர உள்ள இந்த தீர்மானத்திற்கு இந்தியா,பங்களாதேஷ், ஜப்பான், பிரிட்டன், நியூசிலாந்து, பிரேசில்,துருக்கி கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.