வீதிகளிலே கிருமி நாசினி தெளிப்பது  வைரஸை கொல்லாது எனவும் இது ஆரோக்கியத்திற்கு கேடானது என்றும் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனா அமெரிக்கா பிரித்தானியா இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸை கட்டுப்படுத்த பொதுவெளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

இது மக்களுக்கு தோல் பாதிப்பு, கண் எரிச்சல் என்பவற்றை ஏற்படுவத்துவதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்துவருவது  பயனற்றது. இது வைரஸையும் வேறு எந்த கிருமிகளையும் கொல்லாது ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்றும் குப்பைகளில்பட்டு செயலிழந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.

நடைபாதைகள், வீதிகளில் கொரோனாபரவும் என்று கருதப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தனி நபர் மீது கிருமிநாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ள சுகாதார நிறுவனம், வீடுகள், அலுவலகங்கள்  மற்றும் குறித்த பகுதிகளில் கிருமி நாசினி மருந்து நனைக்கப்பட்ட துணி மூலம் துடைப்பதால் கிருமிகளை அழிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தால் இதுவரை உலகளாவிய ரீதியில் 4,805,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 316, 732 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 1,860,051 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.