(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிமுறை படிமுறையாக தளர்த்தி பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் கடந்த வாரம்  ஆரம்பிக்கப்பட்ட போதும், இன்று  ஞாயிற்றுக்கிழமை (17.05.2020) ஆம் திகதி முழு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாடு முழுதும் அமுல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போதும்  முழு நேர ஊரடங்கு நிலைமையின் கீழ் உள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிற ஏனைய 23 மாவட்டங்களிலும் இன்று அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு நிலைமை நாளை அதிகாலை 5.00 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் நாளை திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அதன் பின்னர் இவ்வாரம் முழுதும் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் மட்டும் அங்கு இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரையில் 9 மணி நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளது. 

எனினும் தற்போதும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள முழு நேர ஊரடங்கு நிலைமை மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸார் கூறினர்.

 

கடந்த 14 நாட்களில் நாட்டில் சமூகத்தில் இருந்து எந்த தொற்றாளரும் கண்டறியப்படாத நிலையிலும், கொழும்பில் எழுமாறாக இடம்பெறும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படாத நிலையிலும் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நிலைமையை தொடர்வதற்கான காரணம் என்னவென கேசரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நாட்டில் தற்போது 970 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தொற்றாளர்கள் நாடு முழுதிலும் இருந்து 31 கொத்தணி பரவல்களால் தொற்றுக்கு இலக்கானவர்கள். 

இதில் நான்கு கொத்தணி பரவல்களை தவிர ஏனைய அனைத்து கொத்தணி பரவல்களும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை மையப்படுத்தியவை. அவ்வாறான பின்னணியில் இந்த இரு மாவட்டங்களிலும் கொரோனா தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.

எனவே தான்,  அத்தியாவசிய சேவைகளுக்கு, உற்பத்தித் துறைக்கு பாதிப்பு ஏற்படா வண்னம் இவ்விரு மாவட்டங்களிலும் ஊரடங்கு நிலைமையை தொடர்கின்றோம். அவ்விரு மாவட்டங்களிலும் ஏற்படும் முன்னேற்றங்களை ஆராய்ந்து தேவையான  முடிவுகள் அவ்வப்போது எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 இந்நிலையில் ஊரடங்கு காலப்பகுதியிலோ அல்லது அது தளர்த்தப்படும் போதோ  தனிமைப்படுத்தல் சட்ட நியதிகளுக்கு அப்பால் சென்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதற்கான  அதிகாரம் பொலிஸாருக்கு  வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போதுவரை மாவட்டங்களுக்கு இடையிலான  பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை திங்கள் முதல் அதனை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும் இன்றிரவு 7.30 மணி வரை அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.  

எனினும் நாளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உள்ள நிலையில் தொழிலுக்கு செல்வோருக்காக ரயில், பஸ் வண்டிகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையினர் கூறினர்.

அத்துடன்  தனிப்பட்ட வாகனங்கள், வாடகை வாகனங்கள், முச்சக்கர வண்டிகளிலும் தொழிலுக்கு செல்லலாம் எனவும், தொழிலுக்கு செல்லும் போர்வையில் தனிப்பட்ட பயணங்கள் செல்கின்றமை தெரியவந்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் கூறினர்.