(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக தமது ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை முப்படையினர் , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு பொருந்தாது என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் அனைத்து அரச ஊழியர்களிடமும் ஒரு மாத சம்பளத்தை அல்லது ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் அமைச்சினால் அனைத்து நிறுவன பிரதானிகளுக்கும் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டதோடு, சம்பளத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கைக்கு அமைய தமது சம்பளத்தை வழங்குவதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்கள் மூலம் இராணுவத்தினரதும் பொலிஸாரினதும் ஒரு சம்பளத்தை அறவிடுவதாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டதைப் போன்று வெளியாகியுள்ள அறிக்கையை நிராகரிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.