இலங்கையில் பிரம்மாண்டமான கிரிக்கெட் அரங்கொன்று நிர்மாணிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் குறித்த பிரம்மாண்டமான கிரிக்கெட் அரங்கு ஹோமாகமவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு அமையப்பெறவுள்ள பகுதியை அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் இணைந்து இன்றையதினம் பார்வையிட்டனர்.

இது தொடர்பில் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

தடைப்பட்டிருந்த கிரிக்கெட் அரங்க நிர்மாணப்பணிகள் தற்போது மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோமாகமவிலுள்ள  தியகம பகுதியில் இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு நிர்மணிப்பதற்கான திட்டத்திற்கு 26 ஏக்கர் நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட போதிலும் அது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் அரங்கில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து இருந்து பார்க்க முடியும். அத்துடன் இங்கு பகலிரவு கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடியவகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த கிரிக்கெட் அரங்கின்  2 ஆம் கட்ட நடவடிக்கையாக மேலதிகமாக 20 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படும். அத்துடன் இந்த அரங்கு மொத்தமாக 60 ஆயிரம் இருக்கைகளை கொண்ட பிம்மாண்ட கிரிக்கெட் அரங்காக அமையும் எனத் தெரிவித்தார்.