(ஆர்.யசி)

நேற்றைய தினம் சனிக்கிழமையிலிருந்து வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ள "அம்பான் " தாழமுக்கம்  தற்போது சூறாவளியாக மாற்றமடையவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து.

இந்த சூறாவளியானது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார்  670 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள காரணத்தினால் நாளை தொடக்கம் நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள "அம்பான்" தாழமுக்கம் தற்போது சூறாவளியாக மாற்றம் பெறவுள்ள நிலையில் அடுத்துவரும்  இரண்டு அல்லது மூன்று நாட்களில் வடக்கு திசையில் இருந்து வடமேல் திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றதால் நாளை தொடக்கம் மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இப்போதுவரையில் எட்டு மாவட்டங்களில் 775 குடும்பங்களை சேர்ந்த 2,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கனமழை காரணமாகவும் மண்சரிவு காரணமாகவும் இருவர் உயிரிழந்துள்ளதுடன்  முழுமையாக 9 வீடுகளும், பகுதி அளவில் 473 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்

கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. தெற்கின் பல பகுதிகள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் மீண்டும் மழை அதிகரிக்கும் காரணத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடல் கொந்தளிப்பு அதிகரிக்கும்

அத்துடன் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமிட்டர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையிலான கடற்கறைகளில் கொந்தளிப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுவதால் இன்று தொடக்கம் மீள் அறிவிக்கும் வரையில் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை மீண்டும் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மண்சரிவு அபாயம்

இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் நாட்டில் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில் நாளை தொடக்கம் மீண்டும் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் காலி, மாத்தளை, இரத்தினபுரி  களுத்துறை, கேகாலை, மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர்நிலைகள் நிரம்பும் அபாயம்

கடந்த தினங்களில் பெய்த கனமழை காரணமாக மஹா  ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் கிரியுல்ல, மரதகொல்ல பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை நாளை தொடக்கம் அதிகரிக்கும் நிலையில் மேலும் பல நீர் நிலைகள் நிரம்பும் அவதானம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால்  குகுலே கங்கை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மின்னலின் தாக்கம் அதிகரிக்கும்

அத்துடன் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக பலத்த இடியுடன் மின்னல் தாக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், மக்கள் வெளிப்பிரதேசங்களில் நடமாடுவதும், மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வெட்டவெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.