ஆண்டுதோறும் மரணித்த மக்களுக்காக நாம் நினைவேந்தலைச் செய்து வருகின்றபோதும் இம்முறை உலகத்தொற்று நோயான கொரோனாவால் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் எம்மக்கள் கொல்லப்பட்டு, மண்ணோடு மண்ணாகிய இந்நாளில் அவர்களை நினைவு கூருவது நம் எல்லோரதும் இதயபூர்வ கடமையாகும் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

போர் நிறைவடைந்து 11ஆண்டுகளாகின்ற நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11 ஆண்டு நிறைவையொட்டி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினரின் வாழ்வில் ஆறாத ரணமாக இரத்தக் கறையை பதித்து விட்டுச் சென்ற துயர தினமாக மே 18 ஆம் திகதி இருக்கின்றது. போரின் இறுதிக் கட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவித் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட நாள் இதுவாகும்.

ஆண்டுதோறும் மரணித்த மக்களுக்காக நாம் நினைவேந்தலைச் செய்து வருகின்றபோதும் இம்முறை உலகத்தொற்று நோயான கொரோனாவால் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் எம்மக்கள் கொல்லப்பட்டு, மண்ணோடு மண்ணாகிய இந்நாளில் அவர்களை நினைவு கூருவது நம் எல்லோரதும் இதயபூர்வ கடமையாகும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை, சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர இனப்படுகொலை நிகழ்வாகும். மே 18 ஆம் திகதி என்பது இலங்கையில் வாழும் எம்மை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் வாழும் எமது உறவுகளின் இதயங்களையும் கீறி ரணப்படுத்திய துயரமிக்க நாளாகும்.

பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள என்ற பாரபட்சம் இன்றி அனைவரையும் பலி கொண்டது இந்நாள். போர் விதிகளின் பிரகாரம் பாதுகாக்கப்பட வேண்டியவையாகவுள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என்பன மீது சரமாரியாக குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அவ்விடங்களில் தஞ்சமடைந்து தம் உயிரைப்பாதுகாத்து கொள்ளச் சென்ற பெருந்தொகை மக்கள் பரிதாபகரமாக மடிந்தார்கள். கணவரை இழந்த மனைவிமாரும் மனைவியரை இழந்த கணவன்மாரும், பிள்ளைகளை இழந்த பெற்றோரும் ,பெற்றோரை இழந்த பிள்ளைகளும் ஆயிரக்கணக்கில் நிர்க்கதியாகியுள்ளனர். இறுதிக்கட்ட போரில் தமக்கு நடந்த கொடூரங்களுக்கு நீதி கிடைக்காதா என்பதே உடமைகளையும் உறவுகளையும் இழந்து நடைப்பிணம் போன்று இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் எமது மக்களன் ஏக்கமாகும்.

நீதி கிடைத்தால் மட்டும் போதுமா? இந்த 11வருடங்களில் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டனவா? வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டனவா? அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு செய்யப்பட்ட ஊக்குவிப்புகள் தான் என்ன? அவை திருப்திகரமானவையா?  பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களில் பெண்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றனவா? அங்கங்களை இழந்த உறவுகளுக்கு தமது நாளாந்த கடமைகளை மேற்கொள்ளும் வகையில் ஓரளவுக்கேனும் தொழிநுட்பம் சார்ந்த வசதிகள் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளனவா? இவற்றுக்கான பதில் இன்றுவரையில் கிடைக்கிவில்லை. இவற்றுக்கு தீர்வளிப்பதன் மூலமே பாதிக்கப்பட்ட எம்மக்களின் மனங்களை ஓரளவேனும் ஆற்றுப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.