இலங்கையைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மரணிக்க, அதன் காலநிலையே பிரதான காரணம் என்றும் கூறப்படுகின்றது. 

அதாவது இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் வைரஸ் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது அழிந்துவிடும் என்று கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட அமெரிக்க மக்களை சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

எதுவாக இருப்பினும் வெப்பமான சூழ்நிலை வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்தும் என்று பரவலாகவே கருத்துக்கள் நிலவுகின்றன.

இவ்வாறிருக்க நாட்டில் திடீரென காலநிலை  மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென பெய்யும் மழையும் காற்றும் மக்கள் மத்தியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இது வரை இருவர் பலியாகி உள்ளதோடு 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

கேகாலை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கேகாலை - அவிசாவளை   பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மலையகத்தில் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக நுவரெலியா,  கொட்டகலை மேபீல் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்று முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

 நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அபாயம் என்பன ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த சில தினங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர் பார்க்கலாம் எனவும் வளிமண்டல திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை தொடரும் எனவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மழை பெய்ய ஆரம்பித்த கையோடு நுளம்புகளின் பெருக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால்  கொரோனவை அடுத்து டெங்கு அந்த இடத்தைப் பிடித்து விடுமோ என்ற அச்சம் பொதுவாகவே தோன்றியுள்ளது.

மனித உயிரை குடிக்கும் எதுவாக இருப்பினும் அது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தலைவலி  வலியைத் தொடர்ந்து திருகுவலி தோன்றிய கதையாக இல்லாமல், டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.