வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். 

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு  உள்ளாக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்களென 190பேர் பேருந்துகளின் மூலம் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். 

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,  கொவிட் 19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 31 பேர் இன்றையதினம்  நாவலப்பிட்டி, கண்டி , மொனராகலை, செவனகல போன்ற இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. 

 

இதேவேளை கொவிட் 19 வைரஸ் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அழைத்துவரப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.