(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னரான பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வதற்காக இலங்கை - இந்திய வர்த்தக சம்மேளனங்கள் இணைந்து இணைய மாநாடொன்றை நடத்தியிருக்கின்றன.

இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் கூட்டிணைந்த சம்மேளனம் (ASSOCHAM) ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்தே மேற்படி இணைய செயலமர்வை  நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தன.

இந்த இணைய செயலமர்வில் (Webinar) கருத்து தெரிவித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார  மற்றும் வர்த்தக  பிரிவின் தலைமை அதிகாரி சுஜா கே மேனன்,  'அரசாங்கத்திற்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் இடையிலான ஒன்றிணைந்த முயற்சிகள் துரிதமான பொருளாதார மீட்சியினை உறுதிப்படுத்தும்' எனக்  குறிப்பிட்டார்.  

அண்மையில் இலங்கைக்கான  இந்திய உயர் ஸ்தானிகர்  தனது நியமனப்பத்திரத்தை  ஜனாதிபதியிடம்   காணொளி மாநாடு மூலமாக சமர்ப்பித்திருந்தமை இலங்கையிலும் இந்தியாவிலும் முதன்முதலாக நடைபெற்ற ஒரு நிகழ்வெனச் சுட்டிக்காட்டிய அவர், கொவிட் - 19 வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பத்தின் புத்தாக்கமான பயன்பாடு மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

ஆசியான் (ASEAN),  இந்திய மையம்  (AIC),  மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் பொறிமுறை (RIS),  ஆகியவற்றின் தலைவர் பேராசிரியர் பிரபிர் தே, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள டி சில்வா,  இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் கூட்டிணைந்த சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் தீபக் சூத் மற்றும் அதன் முன்னாள் தலைவரும் கொஸ்மோஸ் (Cosmos) குழுமத்தின் தலைவருமான அனில் கே அகர்வால்,  இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைமை பொருளியலாளர் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் இந்த இணைய செயலமர்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.