டும்….டும்…..டும்……எனவே நாட்டு மக்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், ஒன்பதாவது பொதுத் தேர்தல் ஆணைக் குழு அறிவித்துள்ளது போன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடைபெறாது……டும்…..டும்…..டும்…..

இன்றளவும் பல நாடாளுகளின் கிராமப் பகுதிகளில் மேளம் அடித்து செய்தி சொல்லும் வழக்கம் உள்ளது. ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிறகும் கூட, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் பொது அறிவிப்புகளை வீதியிலும் சந்தையிலும் அறிவிக்க `டவுன் க்ரையர்`-Town Crier- எனும் அரச ஊழியர்கள் இன்றும் உள்ளனர்.

அண்மை காலத்தில் பிரிட்டிஷ் அரசியார் எலிசபெத்துக்குக் கொள்ளுப் பேரன் பிறந்த போதும் இப்படி மணியும், மேளமும் அடித்து அந்த நல்ல செய்தி நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் தமுக்கு அடித்து செய்தி சொல்லும் வழக்கம் உள்ளது.

ஆனால் இலங்கை தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தமுக்கு அடிக்காமல், பொதுத் தேர்தல் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதி நடைபெறாது என்பதைத் தெரிவித்துவிட்டார்.

ஜனாதிபதியால் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறாதது, பின்னர் நோய் தொற்று பேரிடர் காரணமாக அந்தத் தேர்தல் ஜூன் 20 அன்று நடைபெறும் என்று மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான மும்மூர்த்திகள் குழு அறிவித்தது, பொது விடுமுறையன்று வேட்பு மனு ஏற்கப்பட்டது, அரசியல் யாப்பின்படி தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவுக்கு உள்ளதா ? போன்ற ஏராளமான விடயங்கள் குறித்து பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இலங்கை அரசியல் யாப்பின் 19 ஆவது சட்ட திருத்தம் மூலம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலை நடத்துவது தொடர்பிலான முடிவு இப்போது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களிடம் உள்ளது.

நாட்டின் தலைமை நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான அந்த அமர்வு நாளை, அதாவது மே மாதம் 18 மற்றும் 19 திகதிகளில் மனுக்களை விசாரிக்கவுள்ளது.

அந்த அமர்வின் தீர்ப்பு வரும்வரை தேர்தல் திகதியை அறிவிக்க இயலாது என்று தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் தெரிவித்துவிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வாரம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வகையில், தேர்தலுக்கான பிரச்சார காலம் குறைந்தது ஐந்து வாரங்கள் இருக்க வேண்டும் என்று நாடளுமன்ற தேர்தல் சட்டம் தெரிவிப்பதால், ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் சாத்தியங்கள் இல்லை.

நீதிமன்ற தீர்ப்பு ஒரு புறம் இருக்க, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத சூழலில், தேர்தலை நடத்துவது முறையாக இருக்குமா எனும் கேள்வியும் உள்ளது. சுகாதார அமைச்சு தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

‘`சுதந்திரமாக, நியாயமான வகையில் பொதுத் தேர்தலை நடத்துவது சவாலான செயல்`` என்று அரசியல் யாப்புப் பேரவையின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பில் இருக்கும் சவால்களுக்கு மத்தியில் பொதுத் தேர்தல் எந்தளவுக்கு சுதந்திரமானதாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் ஆளும் தரப்பினரோ விரைவில் தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதிலும் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளனர்.

அரசியல் யாப்பின்படி மூன்று மாதங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றம் இல்லாமால் அரசாங்கம் செயல்பட முடியும். 

இருக்கும் சிக்கல்கள் போதாதென்று புதிதாக உருவாகியுள்ள கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட வேண்டும் என்று ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஓஷல ஹேரத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

புதிய கூட்டணியின் பொதுச் செயலராக ரஞ்சித் மதும பண்டார நியமிக்கப்பட்டதற்கு ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சியின் செயல் குழு ஒப்புதல் இல்லாததால், அவரது கையொப்பத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனு கோருகிறது. 

விவாகரத்தான பிறகு, தாலியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது போலுள்ளது இந்தக் கோரிக்கை. கட்சியிலிருந்து பெரும்பாலானோர் வெளியேறி புதிய கூட்டணி அமைத்த பிறகு மரத்தடி பஞ்சாயத்து புலம்பி என்ன செய்ய முடியும்?

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி-ஸ்ரீலங்கா பொதுஜன பெர்னமுனவின் அவைத்தலைவரும் சட்டத்துறை பேராசிரியருமான ஜீ எல் பீரிஸ், கொரோனோ நோயை முற்றாக ஒழிக்க அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆகக் கூடும் என்று கூறப்படுவதால், அதுவரை தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்றொரு கேள்வியை எழுப்பியதுடன் அதற்கான பதில்-விரைவாகத் தேர்தலை நடத்துவதே என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் இருந்திருந்தால், அதன் ஐந்தாண்டு ஆயுட்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி முடிவுக்கு வந்திருக்கும். எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்படி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டாலும், பொதுத் தேர்தலுக்கான புதிய தேர்தல் திகதி விரைவாக அறிவிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இதனிடையே நாட்டின் சட்டமா அதிபர் `வக்கீல் வண்டுமுருகன்` போன்று கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ``யுவர் ஆனர், தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை`` என்பது போலுள்ளது அவரது பதில்கள்.

மே 18 ஆம் திகதி திங்கட்கிழமை-தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணக்கு வரும் நிலையில், தேர்தல் ஆணைக் குழுவின் சார்பில் தன்னால் ஆஜராக முடியாது என்று சட்டமா அதிபர் உச்சநீதிமன்றக்கு தெரிவித்துள்ளார். 

``தேர்தல் ஆணைக்குழு ஒரு பொது நிறுவனம் அல்ல, அது ஒரு சுயாதீனமான ஆணையம், எனவே சட்டமா அதிபர் தினைக்களம், தேர்தல் ஆணையக் குழுவின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடாது``என்று `வண்டு முருகனின்` நிலைப்பாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேவமுனி டி சில்வா.

அது சுயாதீன ஆணைக் குழு என்றாலும், அரசியல் யாப்பின் கீழ் அந்த யாப்பின் பேரவையால் நியமிக்கப்பட்ட நிலையில், அது அரச நிறுவனம் அல்ல என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறுவது சரியான நிலைப்பாடா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

``சட்டத்தின்படி தேர்தலை நடத்தவும்`` என்று சட்டமா அதிபர் பதிலளித்த போது, தேர்தல் ஆணைக் குழுவுக்கும் தமது அலுவலகத்துக்கும் தொடர்பு இல்லை, அவர்களுக்கு எம்மால் அறிவுரை கூற இயலாது என்று ஏன் கூறவில்லை. தேர்தல் ஆணைக் குழு சுயாதீனமான ஒன்று என்பது அவருக்கு தெரியாதா எனும் கேள்விக்கு என்ன பதில்?

தேர்தல் ஆணையக் குழு, சட்டமா அதிபர் அல்லாமல் சுயாதீனமாக வேறொரு சட்டத்தரணியை நியமிக்க சட்டத்தில் இடமுள்ளதா, அப்படி நியமித்தால் அவர் கேட்கும் தொழில்ரீதியான ஊதியத்தை தேர்தல் ஆணைக் குழுவால் அளிக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்தக் குழுவின் மும்மூர்த்திகளில் ஒருவரான ரட்ணஜீவன் ஹூல், தான் தனியாக சட்டத்தரணியை நியமித்துக்கொள்ளப் போவதாக தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார். அவரது சட்டத்தரணிக்கான ஊதியத்தை யார் கொடுப்பார்கள்!

அவரது சட்டத்தரணியின் வாதங்களுடன் மற்ற இருவரது சட்டத்தரணிகளும் உடன்படுவார்களா-முரண்படுவார்களா? 

பொதுத் தேர்தல் குறித்து நாட்டு மக்கள் யாரும் பெரிதாக கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுமக்கள் உள்ளனர்.

இன்றைய நிலையில் அன்றாடம் இடியாப்பம், பிட்டு, சம்பல், சொதிக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தாலே போதும் என்பதே யதார்த்தம்.

ஆனால் சொதியையும் சம்பலையும் கட்சிகள் ஆளுக்கொரு புறம் பறித்துக் கொண்டு நிற்க, தேர்தல் எனும் இடியப்பத்தை உண்பதற்கு யாரும் இப்போது தயாராக இல்லை.

- சிவா பரமேஸ்வரன் ( முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி )