யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என ஐஸ்லாந்து அணியிடம் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து அணியின் முகாமையாளர் ரோய் ஹட்ஜ்சன் பதவி விலகியுள்ளார்.

பிரான்சில் இடம்பெற்றுவரும் யூரோ கிண்ண கால்பந்து போட்டி தொடர் - 2016 இல், வெற்றி பெறாது என்று கருதப்பட்ட ஐஸ்லாந்து அணி, இங்கிலாந்து அணியை ( 2-1) என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

இந்த தோல்வியையடுத்து யூரோ கிண்ண - 2016 கால்பந்து போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறிவிட்டது.

இங்கிலாந்து தோல்வியடைந்ததன் எதிரொலியாக, இங்கிலாந்து கால்பந்து அணியின் முகாமையாளராக கடந்த நான்கு ஆண்டுகள் கடமையாற்றிவந்த ரோய் ஹட்ஜ்சன் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்ட ஐஸ்லாந்து அணி, எதிர்வரும் திங்கட்கிழமை பாரிஸில் இடம்பெறும் காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் அணியான பிரான்ஸை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.