டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால்  800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக செலவை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் எதிர்வரும் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை டோக்கியே ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு, அந்த நகர நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும். ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 12.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்துள்ளது.

தற்போது ஒரு வருடத்துக்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 800 மில்லியன் டொலர் ( இலங்கை மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபா) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணத்தை போட்டி அமைப்பாளர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக்குழுத் தலைவர் தோமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக செலவாகும் 800 மில்லியன் டொலர்களில் 650 மில்லியன்  டொலர்களுக்கான செலவை சர்வதேச ஒலிம்பிக் குழுவும், 150 மில்லியன் டொலர்  செலவை சர்வதேச சம்மேளனங்கள் மற்றும் தேசிய ஒலிம்பிக் சங்கங்கள்  ஆகியவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தோமஸ் பேச் கூறுகையில், ‘‘போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கை, அடுத்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்க நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதிலிருந்து இன்னமும் 14 மாத காலம் இருக்கிறது. எதிர்காலம் திட்டம் குறித்து எந்தவொரு  ஊகங்களையும்  நாம் தெரிவிக்க இயலாது.

கடந்த மாதம் டோக்கியோ  ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டால்  போட்டியை நடத்தும் நாட்டுக்கு  ஏராளமான செலவு ஏற்படும். இருந்தாலும் நாங்கள் அதில் பெருமளவு பங்கெடுத்துக் கொள்வோம்’’என்றார்.