(நா.தனுஜா)

முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்று சுமார் ஒருவருடம் கடந்திருக்கும் நிலையில், அந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின்  முன் நிறுத்துவது அரசாங்கத்தின் கடமையென சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது பரவலாகத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

அதனையடுத்து கடந்த வருடம் மே 13 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், 14 ஆம் திகதி முஸ்லிம்கள் மீதான  இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய  அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இத்தாக்குதல்கள் இடம்பெற்று சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது:

சிறுபான்மை மக்கள் உள்ளடங்கலாக இயலுமை குறைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்களுக்கு எவ்வித கெடுதல்களும் ஏற்படுவதைத் தடுக்கும் அதேவேளை, கடந்த வருடம் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும் முக்கியமானதாகும்.