தமிழ் அரசியலில் தப்பிப் பிழைப்பாரா சுமந்திரன் ?

16 May, 2020 | 12:08 PM
image

-கபில்

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருந்த செவ்வி, தமிழ் அரசியல் பரப்பில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னரே, கொரோனா அலை வீசத் தொடங்கி விட்டது.

அந்த அலைக்குள், அரசியல் கட்சிகள், மற்றும் அவற்றின் பிரசாரங்கள் எல்லாமே அடித்துச் செல்லப்பட்டிருந்தது.

எனினும், கொரோனாவைப் பயன்படுத்தி நிவாரணம், கண்டனம் என்று வெவ்வேறு விதமான அரசியல் பிரசாரங்களை செய்யும் முயற்சிகள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டு தான் வந்தன.

ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அதனை பிற்போடுவதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதே, இன்னொரு பக்கத்தில் தேர்தலுக்கான பிரசாரங்களையும் கட்சிகள் தொடங்கி விட்டிருந்தன.

இரா.சம்பந்தனை, சி.வி.விக்னேஸ்வரன் ஏமாற்றி விட்டார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பை வெளியிட்டனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகைக்கு கூட்டத்துக்கு சென்ற கூட்டமைப்பினரை, மகிந்தவுடன் டீல் வைத்துக் கொள்ள தயாராகி விட்டனர் என்று அனந்தி சசிதரன் கூறியிருநதார்.

இவ்வாறாக கொரோனாவுக்குப் பிந்திய சூழலில் தமிழ் அரசியல் பரப்பு, சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த நிலையில் தான், சிங்கள ஊடகம் ஒன்றுக்கு செவ்வி கொடுத்து மாட்டிக் கொண்டிருக்கிறார் எம்.ஏ.சுமந்திரன்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தொனியில் அவர் வெளியிட்ட கருத்து ,கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கிறது.

ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும் சரி, தமிழ் அரசியல் பரப்பிலும் சரி, சுமந்திரன் கடுமையான எதிர்ப்பை சநதித்து வந்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில், ஆயுதப் போராட்டம் பற்றிய அவரது கருத்து, இன்னும் கூடுதலான கவனத்தையும், எதிர்ப்பையும் பெற்றிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கொண்டுள்ள நெருக்கம், தமிழ் அரசுக் கட்சிக்குள் வலுவான, ஆளுமையான தலைமைத்துவமின்மை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனங்கள் என்பன சுமந்திரனின் எழுச்சிக்கும், அவர் இதுவரை அரசியலில் அதிகளவில் மின்னிக் கொண்டிருப்பதற்கும் காரணமாக இருந்தன.

சம்பந்தன்- சுமந்திரன் கூட்டு தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த பலர் பிளவுபட்டுப் போனதற்கும் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.

அதுமாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் செல்வாக்கை இழந்து வருவதற்கும், சுமந்திரன் தான், காரணமாக கூறப்பட்டு வந்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில், சுமந்திரன் அவ்வப்போது, ஆயுதப் போராட்டம், விடுதலைப் புலிகள், இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் வெளியிட்டு வரும் கருத்துக்கள், தமிழ் அரசியல் பரப்பிலும், தமிழ்மக்கள் மத்தியிலும் கொதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

அவ்வாறான ஒரு கொதிப்பு தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆயுதப் பேராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரன் மன்னிக்க முடியாத தவறிழைத்து விட்டார் என்று ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பொங்கியெழுந்திருக்கிறார்.

சுமந்திரனை கூட்டமைப்பின பேச்சாளர் நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்று சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

மாவை சேனாதிராசாவும் விழுந்தடித்துக் கொண்டு, சுமந்திரன் கூறியது கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல என்று ஒரு நீண்ட – குழப்பம் நிறைந்த அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், சுமந்திரன் கூறியதை கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது, அதேவேளை, கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு அவர் கூறியதை தனிப்பட்ட கருத்து என்று கொள்ளவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சூழலில் இந்த விவகாரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பெரும் தலைவலி ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே.

ஏனென்றால், அவர் இந்த எதிர்ப்புகள், கண்டனங்கள், விமர்சனங்களையெல்லாம் வெளியே இருந்து எதிர்கொள்ளவில்லை. கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள், இரா. சம்பந்தனையும், சுமந்திரனையும் கூட்டமைப்பையும் விமர்சனம் செய்வது வழக்கம் என்பதால், அது அவருக்கு பழக்கப்பட்டு விட்டது.

அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் இரா.சம்பந்தன். அண்மையில் கூட ஒரு சந்தர்ப்பத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

ஆனால், சுமந்திரனின் கருத்தை முன்னிறுத்தி இப்போது கிளம்பியுள்ள எதிர்ப்பை இரா.சம்பந்தனால் அவ்வாறு இலகுவாக ஒதுக்கி வைத்து விட்டுச் செல்ல முடியாது.

ஏனென்றால், சிக்கல் இப்போது முனைத்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் அதிருப்தியை கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே, அதிருப்தியாக கருத்தை வெளியிட்டிருக்கிறார். அந்தக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பலரும், போர்க்கொடி தூக்குகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு போர்க்கொடி தூக்குவதற்கும் காரணம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரப் போகிறது. சுமந்திரனின் கருத்துக்கள் இந்தத் தேர்தலில் கூட்டமைப்புக்கு சரிவை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்தே வலுவாக உள்ளது. 

சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்து அல்ல என்பது மக்களுக்கு கொண்டு செல்லப்படாது போனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது போனால், தமது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டு விடலாம் என்பது பங்காளிக் கட்சிகள், முன்னாள் எம்.பிக்களின் கவலை.

ஏற்கனவே, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கூட்டமைப்பின் எம்.பிக்களில் பலருக்கு, சுமந்திரனின் மீது காழ்ப்பு இருந்து வந்தது. சிலர் அதனை வெளிக்காட்டினர். சிலர் மறைமுகமாக அவரை கவிழ்க்க முயன்றனர்.

வரும் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பலத்த சவால் இருப்பதால், கடந்த முறை பதவியில் இருந்த எம்.பிக்களுக்குள் போட்டி இருப்பது அதிசயமல்ல.

இவ்வாறான நிலையில், சுமந்திரன் தனக்கு எதிரான அஸ்திரத்தை தானே தூக்கிக் கொடுத்த சந்தர்ப்பத்தை பங்காளிக் கட்சிகளும், அவரது சகபாடிகளும் தவற விடுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.

இந்த நிலையில், சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்புக்குள் கிளம்பியிருக்கும் சர்ச்சைகள், எதிர்ப்புகள், வழக்கம் போலவே தணிந்து போகப்போகிறதா அல்லது, பூகம்பமாக வெடிக்கப் போகிறதா என்று கணிப்பது கடினம்.

கடந்த காலங்களில் இவ்வாறான சர்ச்சைகள் வெடித்திருந்தாலும், கூட்டமைப்புக்குள் இருக்கும் வெறுமை நிலையால் சுமந்திரன் தப்பித்து வந்திருக்கிறார்.

அவரை விட்டால் வேறு கதியில்லை என்பதே கூட்டமைப்பில் உள்ளவர்களின் நிலை. எனவே, ஆரம்பத்தில் துள்ளிக் குதித்து விட்டு பின்னர் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கொள்வார்கள்.

இப்போதைய நிலையும் அவ்வாறு தான் இருக்கும் என்று கருத முடியாது. ஏனென்றால், சுமந்திரன், ஆயுதப் போராட்டத்தின் மீது சுமத்தியுள்ள பழியை, புலிகளின் மீது சுமத்தும் பழியை தமிழ் மக்கள் அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

ஏற்கனவே அவர், பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் ஆழ்மனதில் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த விவகாரத்திலும் அவர், ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தப் போய், தனக்குத் தானே குழியை வெட்டிக் கொண்டிருக்கிறார் போலவே தெரிகிறது.

ஏனென்றால், கூட்டமைப்பு எதிர்ப்பு அலை என்பதற்கும் அப்பால், சுமந்திரன் எதிர்ப்பு அலை பிரமாண்டமானதாகவே தெரிகிறது.

அந்த அலையில் இருந்து தப்பிக்கக் கூடிய நிலையில் சுமந்திரன் இருக்கிறரா என்பதை பொதுத்தேர்தல் முடிவுகள் தான் தீர்மாகிக்கப் போகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04