(எம்.எப்.எம்.பஸீர்)


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 489 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்ந்துள்ளது.

இன்றிரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் எந்த ஒரு தொற்றாளரும் அடையாளம் காணப்படாத  நிலையில், இன்று மற்றும் 32 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இதுவரை 477 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 151 பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.


 

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று 90 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார  சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.  சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பேணியமையாலேயே தொற்றுப்பரவல் நிலைமையை கட்டுப்படுத்த முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

'தற்போது பதிவாகும் பெரும்பாளான கொரோனா தொற்றாளர்கள் கடற்படை மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்த வருகை தரும் சிலரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தற்போதைய நிலையில்,  நாம் அசமந்தமாக செயற்படக்கூடாது. ஆகவே  சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் அரச மற்றும் தனியார் துறையில் தொழிலில் ஈடுபடுவோர் பின்பற்ற வேண்டும்  என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் இலங்கையில் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை இன்று இரவாகும் போது 477 ஆக உயர்ந்துள்ளபோதும், மேலும் 439 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 112 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.