( ஆர்.யசி) 


ஜனநாயகத்தை பலப்படுத்தவும், ராஜபக்ஷவினரின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்தும் போராடியதற்காகவே ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டார். ராஜபக்ஷக்களுக்கு எதிராக போராடும் ராஜித சேனாரத்னவை மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையில் அடைத்தாலும் எமது போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்வோம் என தேசிய மக்கள் சக்தியின் கூட்டணிக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சஜித் பிரேமதாச  கூறுகையில், நாட்டிற்கும், மருத்துவ துறைக்கும் சேவை செய்த தலைவர் இன்று சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுவிட்டார். முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கலில் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் மக்களின் நலன்களுக்காகவும், அப்பாவி மக்களின் உரிமைக்காவும் சேவையாற்றிய தலைவராவர். அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது விடுதலைக்காக நாம் எப்போதுமே போராடுவோம் என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில், இந்த நாட்டில் எதிர்க் கட்சிகளுக்கு எதிரான அரசியல் ரீதியிலான பழிவாங்கல் இடம்பெறுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது. அரசியல் பழிவாங்கல் மட்டுமே இதில் முக்கியம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்த ராஜித சேனாரத்ன முன்வந்தமை, மற்றும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே அவரை பழிவாங்கியுள்ளனர்.

இன்று  நாட்டில் பலருக்கு வேலை பறிக்கப்பட்டுள்ளது. அரச  ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொவிட் -19 குறித்து அரசாங்கம் பொய்யான காரணிகளை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றது. ஆனால் ராஜித சேனாரத்ன கொவிட் -19 குறித்து உண்மையான காரணிகளை தொடர்ந்தும் முன்வைத்து வந்தார். ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ராஜித இன்று தண்டிக்கப்பட்டுள்ளார். எவ்வாறு இருப்பினும் அவரை விடுவிக்க நீதிமன்றத்தை நாடும் அதே வேளையில் அவர் எமக்கு கற்பித்துக்கொண்டுத்த மக்கள் போராட்டத்தின் மூலமாக அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குவோம். இது ராஜிதவிற்கு விழுந்த அடி அல்ல, ஜனநாயகத்தை உருவாக்க முயற்சிக்கும் அனைவருக்கு எதிராகவும் விழுந்த அடி என்றே நாம் இதனை கருதுகின்றோம்.

எவ்வாறு இருப்பினும் இவர்களின் அச்சுறுத்தலை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. எமது அரசாங்கத்தில் என்ன குறைபாடுகள் இருந்தாலும் அச்சம் இருக்கவில்லை. சமூகத்தில் அச்சம் இல்லாது மக்கள் செயற்பட முடிந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்தவுடன் அச்சுறுத்தல் மட்டுமே விடுக்கப்பட்டு வருகின்றது,

மக்கள சமரவீர மீதான குற்றச்சாட்டு சம்பவங்கள் எமது ஆட்சியில் மட்டுமல்ல 2010 ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றது. மன்னார், கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க அவர்களுக்கான பேருந்துகள்  மஹிந்த ராஜபக்ஷவினாலும் முன்னெடுக்கப்பட்டது. சகல தேர்தல்களிலும்  மட்டுமே இது நடப்பதுதான். ரிசாத், மங்கள இதில் குற்றவாளிகள் என்றால் மஹிந்த ராஜபக்ஷவும் குற்றவாளியே. அரச நிதி ஊழல் குறித்து பேசும் இவர்கள் அரச ஊடகங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தாதவர்கள் இன்று நியாயம் பேசுவது வேடிக்கையானது

இது குறித்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹகீம் கூறுகையில்,

எமது அணியில்  உள்ள  பிரபலாமான நபர் மீது மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இம்முறை ராஜித அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் ராஜித போன்றவர்களை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக தமது அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தில் தான் இந்த கைது இடம்பெற்றுள்ளது. இப்போது மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், மிகவும் பலவீனமாக முன்னெடுத்து வரும் அரசாங்கத்தின் நோக்கங்களை தோற்கடிக்க முன்வர வேண்டும். உண்மைகளை மறைத்து ஒரு சில ஊடகங்களின் மூலமாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்ற செய்திகளை நிராகரித்து மக்கள் மீண்டும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகையில்,

ராஜித சேனாரத்ன அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, அவர் அரசியலில் செயற்பாடுகளில் கால் பதித்த தினத்தில் இருந்து மக்களுக்காக சேவையாற்றிய நபர். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன் மட்டும் அல்லாது அவற்றை திருத்தவும் பல நடவடிக்கைகளை எடுப்பவர். அவ்வாறான ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பதன் ஊடாக ஜனநாயகத்தின் குரலை நசுக்கலாம் என அரசாங்கம் நினைத்தால் அது முட்டாள்தனமாகும் என்றார்.

முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இது குறித்து கூறுகையில்,

ராஜபக் ஷக்கள் அடக்குமுறை மூலமாக ஆட்சியை நடத்த எடுக்கும் முயற்சியையும், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளையும் நாம் சகல விதத்திலும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம். ஊழல் குற்றங்களில் எமது உறுப்பினர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக ஊழல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்ற காரணத்தினால் தான் கைது செய்யப்பட்டனர். இவை மிகவும் கோழைத்தனமான செயற்பாடுகள் என்றே நாம் கருதுகின்றோம். ராஜபக்ஷக்கள் வரலாற்றில் எப்போதுமே பழிவாங்கும் அரசியலையே செய்தனர். கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னராவது இவர்கள் திருந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரம் உருப்படியாக ஆட்சி செய்வார்கள் என நினைத்தோம். ஆனால் ராஜபக்ஷக்களை திருத்த முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டனர். எனவே இதனை நாம் தைரியமாக முகங்கொடுப்போம் என்றார்.

கேள்வி :- இந்த கைதுகள் தொடரும் என்ற கருத்தொன்றும் உள்ளது, அது குறித்து ஏதேனும் தெரியுமா?

பதில் :- ஆம், நீண்ட பெயர் பட்டியல் ஒன்றினை வைத்துள்ளனர் என கேள்விப்பட்டோம். எமது பெயர்கள்  உள்ளதென  அறிந்துகொண்டோம் . விஜிதமுனி சொய்சா, ஹிருணிக்காவின் பெயர்கள் உள்ளதென கேள்விப்பட்டோம். இதற்கெல்லாம் நாம் அஞ்சப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் அணைத்து உறுப்பினர்களையும் சிறையில் அடைத்தாலும் எமது போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டுசெல்வோம்.

அவன்கார்ட் ஊழலில் தொடர்புபட்டவரே இப்போதைய ஜனாதிபதி. அவர் ஜனாதிபதியானவுடன் உடனடியாக இந்த குற்றங்களில் இருந்து விடுதலையானார். இவர்கள் அனைவருமே ஊழல் குற்றங்களில் தான் சிறைபிடிக்கப்பட்டவர்கள். குடும்பமே ஊழல் குற்றங்களில் சிக்கியவர்கள். அவர்கள் குறித்து மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.