(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஸாத் பதியுத்தீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றார்கள் என தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடிப்படைவாத சம்பவங்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன்  தொடர்புக் கொண்டுள்ளார். என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவரது உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தை போட்டிப் போட்டுக் கொண்டு அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை தகனம் செய்ய வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவரது உடலை தகனம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. இதனை அரசியலாக்குவது முற்றிலும் தவறு.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களையும் பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இவர்கள் முஸ்லிம் மக்களை தவறான கோணத்தில் திசைத்திருப்பி விடுகின்றார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தவே முயற்சிக்கின்றார்கள் என்றார்.