நாடு முழுவதும் காணப்பட்ட கொவிட் 19 (COVID 19) நோய் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கை பாராளுமன்ற செயலகத்தின் பணிகள் கடந்த 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பணிக்கு சமூகமளித்திருந்ததுடன், அன்றையதினம் நடத்தப்பட்ட கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களினால் தயாரிக்கப்பட்ட கடமை நாட்களுக்கான பணிப்பட்டியலுக்கு அமைய ஏனைய பணியாளர்களை சேவைக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

கொவிட் 19 (COVID 19) தொற்றுநோய் பாராளுமன்ற வளாகத்துக்குள் பரவுவதைத் தடுப்பதற்கான சகல சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பாராளுமன்ற வளாகத்திற்குள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தினால் சகல பணியாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முழுமையாக ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற பணியாளர்கள் தவிர வேறு எவரும் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது.