(ஆர்.யசி)

பெருந்தோட்ட  பகுதிகளில்  மக்களின் வீடுகளை புனரமைக்க வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் கடனை 15 இலட்சமாக அதிகரிக்கக்கோரி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமாக மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் இதுவே மிகச்சிறந்த திட்டம் என்கிறது அரசாங்கம்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தோட்டப்புறங்களில் குறைந்த அடிப்படைவசதிகளுடன் வாழும் மக்களுக்கு வீட்டுத்திட்டமொன்று இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் கடன் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என இருந்ததை, இப்போது 15 இலட்சம் வரையில் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும்,  இந்த கடன் தொகை 4 வீத வட்டியுடன் 20 வருடகால கடனாக மீள் செலுத்தும் வரையில் சலுகைகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டவும் சமுதாய வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையில் யோசனை ஒன்றினை முன்வைத்தார். அது அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்திய கடன் உதவியில் மலையகத்தில் வீட்டுதிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. மறுபுறம் அரசாங்கம் இவ்வாறான வீடுகளை புனரமைக்க ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில், சமுதாய வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்துள்ள யோசனையானது, இதுவரை காலமாக மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் உயரிய ஒன்றாகும். இது குறித்த முழுமையான விளக்கம் இன்று அரச தகவல் திணைக்களதில் முன்னெடுக்கப்படும் என்றார்.