மஹிந்த ரராஜபக்ஷவை தேர்தலில் தோல்வியடைய செய்வதற்காக பஷில் ராஜபக்ஷ இந்திய றோ அமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக விமல் வீரவன்ச ஊடகங்களை சுட்டிக்காட்டி தெரிவித்திருந்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவினார் எனவும் அவர்  குறிப்பிட்டார்.  

ஹாலி - எல பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே      ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாங்கள் தொடர்ந்தும் இருந்தோம் . அவருடன் செயற்பட்டோம். ஆனால்  ஜனாதிபதி தேர்தல் அண்மித்த காலப்பகுதியில் பஷில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகளினால் 24 மணித்தியாலயத்தில் அனைத்தும் மாறிவிட்டன. மஹிந்த ரராஜபக்ஷவை தேர்தலில் தோல்வியடைய செய்வதற்காக பஷில் ராஜபக்ஷ இந்திய றோ அமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக விமல் வீரவன்ச ஊடகங்களை சுட்டிக்காட்டி தெரிவித்திருந்தார். 

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடியில் தள்ளிவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்தும் நோக்கில் அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது  முயற்சித்தார். இருந்தபோதிலும்  அது வெற்றியளிக்க வில்லை. தற்போதும் புதிய கட்சி ஒன்றுக்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வருகின்றார். ஆனால்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் . கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர் என கூறினார்.